உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் – பிரான்ஸில் ஒருவர் பலி

உலக மக்களையும், சீனாவையும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பிரான்ஸ் இல் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கு வெளியில் இடம் பெற்ற நான்காவது மரணம் இது என்ற போதும், ஆசியா கண்டத்திற்கு வெளியில் நிகழ்ந்த முதலாவது மரணம் இதுவாகும்.

பிரான்ஸிற்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த 80 வயதான பெண்மணியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் தனது மகளுடன் வந்திருந்தார். மகள் தற்போது குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் இந்த வைரஸின் தொற்றுதலுக்கு உள்ளான மேலும் 11 பேர் பிரான்ஸ் இல் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் 143 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதுவரை 1526 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 67000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் நேற்று (15) தெரிவித்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 66,492 பேர் சீனாவிலும் ஏனையோர் சீனாவுக்கு வெளியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூகன் வைரஸ் எனப்படும் இந்த கொரொனா வைரஸ் ஆபிரிக்காவிலும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.