ஈழத்தமிழ்த் தொழிலாளர் உரிமை மறுப்புகளும் ஊடகச் சுதந்திரத் தடைகளும்

உலகெங்கும் மேமாதம் என்றதுமே முதலாம் நாள் தொழிலாளர் உரிமைகள் குறித்தும் மேமாதம் 3ம் நாள் ஊடகச்சுதந்திரம் குறித்தும் இவற்றின் பாதுகாப்பு, மேம்படுத்தல் குறித்து அக்கறை காட்டப்படுவது வழமை.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து விலகிய நாள் முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் தொழிலாளர் உரிமைகளை ஒடுக்குவதன் மூலமே சிங்கள பௌத்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

1949 இல் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்து 1832 முதல் 116 ஆண்டுகள் தொடர்ச்சியுடன் வாழ்ந்து வந்த அவர்களை நாடற்றவர்களாக்கி அவர்களுடைய பாராளமன்றப் பிரதிநிதிகள் 11 பேரை பதவியிழக்கச் செய்ததின் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவப் பலத்தைக் குறைத்துச் சிங்கள பௌத்த பெரும்பான்மைப் பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றத்தை மாற்றிச் தமிழர்களுக்கு எதிரான சட்டங்களை பாராளமன்றத்தில் தாங்கள் நினைத்தவாறு இன்று வரை உருவாக்கி வருகின்றனர்.

1956 முதல் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழர்கள் சிங்களத்தில் சித்தியடையாது விட்டால் பதவியிழக்கவும் பதவிக்கான ஊதியத்தைப் பெற முடியாமலும் செய்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மேலாண்மையை இலங்கையின் நிர்வாகத்துறையில் நிறுவிக்கொண்டனர். 1956இல் இலங்கையின் சட்டத்தின் ஆட்சியையும் சிங்கள பௌத்த பேரினவாதம் தனக்கு மட்டும் உரியதாக மாற்றி தமிழர்கள் மேல் இனஅழிப்பு நோக்கிலான தாக்குதல்களையும் அதற்கு நீதி பெற இயலாதவாறு சட்ட அமுலாக்கத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கே உரியது என மாற்றியமைத்தனர்.

இவ்வாறு தமிழர்களின தொழிலாளர் உரிமைகள் மறுப்பு வழியாகவே ஈழத்தமிழர்களை படைபலம் கொண்டு அவர்களின் அரசியல் பண்pவைப் பெறும் நடைமுறை அரசியலை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உயிர், உடல், உரிமை, வாழ்வு என்னும் நான்கையுமே வன்முறைப்படுத்தி இனங்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாக்கினர். இதனை வன்முறையற்ற முறையிலும் சனநாயக வழிகளிலும் தமிழர்கள் எதிர்த்த பொழுது காரணமின்றி கைது செய்து விசாரணையின்றி சிறையிட்டு காலப்போக்கில் படைகளுக்கு கண்ட இடத்தில் சுடவும் விசாரணையின்றி உடலை அழிக்கவும் சட்டரீதியான அதிகாரம் கொடுத்ததின் பின்னணியிலேயே தமிழர்கள் தங்கள் தாயகத்தையும் மொழியையும் இனத்தையும் காத்திட ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

அத்துடன் தங்கள் மொழி உரிமையையும் தாயக உரிமையையும் நிலை நாட்ட அரசுநோக்கிய அரசாக ஈழத்தமிழ் மக்களே தமிழீழ மக்களாகத் தங்களை அடையாளப்படுத்தி முப்பது ஆண்டுகள் போராடினர் ஆனால் உலக வரலாற்றிலேயே மிகமோசமான இனஅழிப்பு மூலம் அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டு படைபலத்தின் மூலம் அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் முறைமையை இன்று வரை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கள் தொடர்கின்றன.

இந்த மனித உரிமை மீறல்களை யுத்தக்குற்றச் செயல்களை மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களை குறித்த விசாரணைகளோ அல்லது நீதித் தீர்ப்புகளோ அல்லது மறுவாழ்வுக்கான முறைமைகளோ இதுவரை சரியான முறையில் இல்லாத நிலையில் இவற்றை வெளிப்படுத்துவதற்கான ஊடகசுதந்திரமும் ஊடகவியலாளர்களை இனம்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாக்குவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்துமறுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனாச் சூழலில் ஈழத்தமிழர்களின் தொழில் உரிமைகளும் ஊடகசுதந்திரமும் குறித்த அக்கறைகளும் பெரிதாக எழுப்பப்பட இயலாத மேதினமாக ஊடகச்சுதந்திரத் தினமாக இவ்வாண்டு மே மாதம் அமைகிறது. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள்தான் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை குறித்த தெளிவையும் விளக்கங்களையும் உலகிற்கு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பைச் சுமந்து நிற்கின்றனர்.