ஈராக் போராட்டத்தில் 300இற்கும் மேற்பட்டோர் பலி

ஈராக்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் 300இற்கும் மேற்பட்டோர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தத்தில் அரசிற்கு எதிராகப் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது ஈராக் பாதுகாப்புப் படையினர் திறந்த வெளி துப்பாக்கிச் சூட்டை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றது. இதனை ஷியா மதகுருமார்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 300இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஈராக் மனித உரிமை ஆணையம், “ஈராக்கில் அரசிற்கு எதிராக வெள்ளிக்கிழமை பஸ்ரா நகரில் நடந்த போராட்டத்தில் 2பேர் கொல்லப்பட்டனர். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகினர். 15,000இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர்  அப்துல் மஹதிக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. அரசிற்கு எதிரான இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.