இலங்கை தமிழரசுக் கட்சி மீது அதிருப்தியில் விக்னேஸ்வரன்

இலங்கை தமிழரசுக் கட்சியினர், பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்று எடுத்த முடிவிற்கு முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரான சி.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வவுனியாவில் கடந்த சனிக்கிழமை கூடி இந்த முடிவை அறிவித்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இருப்பதாலும், ஐந்து தமிழ்க் கட்சிகள் சார்பில் முன்வைத்த கோரிக்கைக்கு சஜித் பிரேமதாசா பதிலளிக்காத காரணத்தினாலும் தமிழரசுக் கட்சியினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் இந்த முடிவை பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் தனது பிரசாரத்திற்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றார். சஜித் நாட்டைப் பிளவுபடுத்தும் தமிழரசுக் கட்சியின் யோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் பிரசாரம் செய்து வருகின்றார்.

அத்துடன் ஐந்து தமிழ்க் கட்சியினர் கூட்டணியாக இணைந்து கொண்ட போதும், தமிழரசுக் கட்சியினரின் இந்த முடிவை கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் தமது கவலையையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றன.

நேற்று(05) வடமாகாண முன்னாள் ஆளுநரான சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விக்னேஸ்வரன் பேசினார்.

தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, தமது கட்சியின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுவதே தமிழ்க் கட்சிகள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வரமுடியாமைக்குக் காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் முயற்சியினால் பொது இணக்கப்பாட்டிற்கு வந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் பிரிந்து விடும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.