இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிரான மதவெறி அதிகரிக்கின்றது;அரச ஊடகங்களும் துணைபோகின்றன

இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிரான மதவெறி அதிகரிக்கின்றது என சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது .

சமூக ஊடங்களிலும் பாராம்பரிய ஊடகங்களிலும் முஸ்லீம்களே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்ற பிழையான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன இதனை தடுத்து நிறுத்தி உண்மையை தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.

கொவிட் 19ற்கு மத்தியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள்,

மாற்றுக்கருத்துடையவர்களிற்கு எதிராக அடக்குமுறைகள் ,முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமை,மற்றும் நாடாளுமன்றத்தினை யூன் 2 ம் திகதி கூட்டமுடியாததன் காரணமாக ஏற்படக்கூடிய அரசமைப்பு நெருக்கடி ஆகியவை குறித்த கரிசனைகளை தோற்றுவித்துள்ளது என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை யூன் இரண்டாம் திகதி கூட்டவேண்டிய அவசியம் அரசமைப்பின் படி உள்ளபோதிலும்,அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையகம் ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் 30திகதியுடன் அரசாங்கத்தி;ற்கு நிதி தொடர்பாக உள்ள அதிகாரம் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,கொவிட் 19ற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆதரவளிக்க முன்வந்துள்ளபோதிலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்றத்தை கூட்ட மறுத்துள்ளார் என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.

பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முஸ்லீம்களே கொரோனா வைரசினை பரப்புகின்றனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன என தெரிவித்துள்ள சர்வதேச நெருக்கடி குழு அரசாங்கம் இன்னமும் பிழையான குற்றச்சாட்டுகளையும் குரோத பேச்சுக்களையும் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவான தொலைக்காட்சியின் பக்கச்சார்பான செய்திகளிற்கு அரசாங்கம் உதவுகின்றது என்ற குற்றச்சாட்டு காணப்படுவதாகவும் சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது