இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறும் போது,

“இதுவரை இலங்கை அரசு நிகழ்ச்சிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் சிங்கள மொழியிலும், தொடர்ந்து தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது. அந்நாட்டின் ஆட்சி மொழியாக இவ்விரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டு இரு மொழிகளிலும் பாடப்படுவதே பொருத்தமானது, சிறப்பானது.

ஆனால் இனி சுதந்திரதின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அதன் தமிழ் மொழி வடிவம் இசைக்கப்படாது என்றும் முடிவு செய்திருப்பது அநீதியானது.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனங்கள் என்று பொருள்பட்டு விடும் என அந்நாட்டு அரசு அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இலங்கையில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பது உண்மை. அனைத்து தேசிய இனங்களும், அவர்களது மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது போல இந்த முடிவு அமைந்துள்ளது.

நீண்ட நெடிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் அனைத்துப் பகுதி மக்களும் அவர்களது மொழிகள் சமமாக நடத்தப்படுவதன் மூலமே அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கையையும் பெறமுடியும்.

எனவே இலங்கையில் வழக்கம் போல சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழிலும் தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசை வலியுறுத்த ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.” என்றார்.