இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்

இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கை சென்றவர்கள், கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து திடீரென அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மீண்டும் சொந்த நாடு செல்ல முடியாது இலங்கையிலேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு 2,400 பேர் இலங்கையில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களை மீட்பதற்கு இதுவரை சிறப்பு போக்குவரத்துகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவர்கள் 2மாதங்களாக இலங்கையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இவர்களை இந்தியாவிற்கு அழைத்துவர  கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி சிறப்பு கப்பல் சேவையொன்று இயக்கப்படவுள்ளது. இந்தக் கடற்படைக் கப்பலில் சுமார் 700பேர் தூத்துக்குடி வரவுள்ளனர்.

இலங்கையிலிருந்து 1200 பேர் இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். அவர்களை இந்தியா அழைத்துவர இம்மாத இறுதியில் கொழும்பிலிருந்து மும்பை, பெங்களுருக்கு இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.