இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபர் குறித்த தகவல்கள்.

நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார்.

73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது இவர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியென நேற்றைய தினம்(01) உறுதி செய்யப்பட்டார்.

இந்த நோயாளி அடையாளங்காணப்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் (On Admission Death) மரணமானார்.

இந்த நோயாளி நீரிழிவு , இரத்த அழுத்தம் ,நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயாளி நோய் உச்சக்கட்டத்தை எட்டிய வேளையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்

இலங்கையில் கொரோனா தொற்றால் முதலாவது மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 148 பேரில் தற்போது 124 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மருத்துவ மனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.