இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலில் தமிழர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழ்த் தலைமைகள் முடிவெடுக்கவேண்டும் – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கோரும் அறிவிப்பு இலங்கையின் அரசியலமைப்புப்படி நவம்பர் மாதம் 7ம் திகதிக்கும் மார்கழி மாதம் 7ம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படல் வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவும் 2020 இல் நடைபெறக் கூடிய சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளும் இலங்கையில் பழைய மாதிரி மீளவும் “எதேச்சதிகாரவிலக்கல்” (Autocratic and Exclusionary) கொள்கைகள் சிறீலங்காவால் முன்னெடுக்கப்படுவதற்கான வழிகளைத் தோற்றுவித்துவிடுமா? என்கிற அச்சத்தை மேற்குலகில் ஏற்படுத்தியுள்ளது.

இதனை“வெளிநாட்டுக் கொள்கைள்” (Foreign policy) ) ஆய்விதழில் ஜெவ்ரிவெல்ட்மென் (Jeffrey Feltman) என்னும் ஆய்வாளர் சித்திரை 2019 இல் ‘சிறீலங்காவின் சனாதிபதி தேர்தல் முன்னேற்றமா? பின்னடைவா? அல்லது செயலற்ற நிலையா? (Sri Lanka’s Presidential Elections : Progress, Regression or Paralysis?)’ என்னும் தலைப்பிலான கொள்கைமீளாய்வுக் கட்டுரை தெளிவாக எடுத்து விளக்குகிறது.

சிங்களப் பெரும்பான்மையினருக்கும் மற்றைய சிறுபான்மையினருக்குமான உறவுகளை மட்டுமல்ல உலகில் இலங்கையின் பூகோள அரசியலிலும் இம் முடிவுகள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இவரின் கருத்தாக உள்ளது. இந்த கொள்கை மீளாய்வுக் கட்டுரை எதிர்வரும் இலங்கையின் சனாதிபதி தேர்தல் உலக அரங்கிலும் தமிழர்களுக்கு மத்தியிலும் மிகமுக்கியமான ஒன்றாகவுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

இதே கருத்து உலகின் பல ராஜதந்திரிகளுக்கு மத்தியிலும் அனைத்துலக ஆய்வாளர்களுக்கு மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் தமிழர்களின் ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பு என்பது அனைத்துலக நிலையில் முதன்மை பெற்றுக் காணப்படுகிறது.  இந்த உலகளாவிய அக்கறைக்கு ஏற்றவகையில் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் அனைத்துலகிலும் உள்ள தமிழினத்தவர்களும் இந்தத் தேர்தலில் ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பை எவ்வாறு முதன்மை நிலைக்கு முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற சிந்தனையும் செயல் திட்டங்களும் பொதுக்கருத்துக் கோளத்தின் வழி உருவாக்கப்பட்டாலே இவ்விடயத்தில் அக்கறையும் ஆர்வமும் உள்ள அனைத்துலக செயற்பாட்டாளர்களால் ஏற்புடைய நடவடிக்கைகளைத் தொடரமுடியும்.

« தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தேர்தலுக்கான கொள்கை விளக்கங்களில் இணைக்க வைப்பது.

« ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுத்து அதனையே தேர்தலில் போட்டியிடுவதற்கான கொள்கையாக வெளிப்படுத்திப் பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர்கள் நிறுத்தல்

« இன அழிப்பு இனத்துடைப்பு மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் காணாமல் போனவர்கள் குறித்த பொறுப்புக் கூறல் மனித உரிமை மீறல்கள் குறித்த தரவுகள் செய்திகள் சான்றாதாரங்கள் சாட்சிகளை கொண்ட ஆவணங்கள், படைகளால் பறிக்கப்பட்ட வீடுகள் காணிகள் வழங்கப்படாமலும் மக்களின் வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டும் மக்கள் தவிப்பது என்பவற்றை தேர்தல் காலத்தில் அதிக அளவில் வெளிப்படுத்தி நீதியும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இன்றிப் பத்தாண்டுகளாகத் தவிக்கும் மக்களுக்கான மேடையாக தேர்தல் களத்தை மாற்றுவது.

«   ஈழத்தமிழர் உரிமைகள் என்பது மனிதஉரிமைகள் மீறலுடன் மட்டுமல்லாது ஈழத் தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி என்கிற அவர்களின் பிறப்புரிமையையும் மறுக்கின்ற பறிக்கின்ற செயலாக உள்ளது என்பதைத் தேர்தல் காலத்தில் தெளிவாக்குவது.