இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன – சரோஜினி சிவச்சந்திரன்

2009 இறுதி யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர், சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பாவித்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே  அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2009 மே 18ஆம் திகதி நிறைவுக்கு வந்த இறுதிப் போரின் போது 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த யுத்தத்தில் சர்வதேச அரங்கில் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக போரில் அகப்பட்ட பொது மக்கள், போராளிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பங்களிப்புடன் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஐ.நா.  இதற்காக சிறிலங்காவையும் இணைத்துக் கொண்டு, ஐ.நா வில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.  இதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்காது தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் உருவாக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பரணகம தலைமையிலான  ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் போரில் தப்பிய தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிறிலங்கா அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக முறையிட்டுள்ளனர்.

மைத்திரி – ரணில் தலைமையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஜெனீவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயும் முத்தெட்டுவேகம ஆணைக்குழுவிடமும் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இரு அரசாங்கங்களும் நிராகரித்தே வந்துள்ளன.