இறந்த வைரஸ்கள் தொற்றுள்ளதாக காட்டும்-அச்சமடையத் தேவையில்லை

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு தொற்றுள்ளதாக மக்கள் பீதியடைய தேவையில்லை. அவர்களின் உடலில் உள்ள இறந்த வைரஸ்கள் தொற்றுள்ளதாக காட்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி ராமச்சந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் 27 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று திரும்பிய 6 பேருக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில்,

5 பேருக்கு தொற்றுள்ளதாக பரிசோதனை அறிக்கை வந்திருக்கின்றது. இதற்கு இறந்த வைரஸ் காரணமாக இருக்கலாம். உலகில் பல நாடுகளில் குணமடைந்து வீடு திரும்பிய பலருக்கு தொற்றுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.

அந்த நாடுகளில் வைரஸ் கல்ச்சர் முறைகள் உள்ளன. ஆனால் அந்த வசதி எங்கள் நாடுகளில் இல்லை. மேலும் கொவிட்- 19 வைரஸ் உடலில் புகுந்து கலங்களை தாக்கும். எனவே பாதிப்படைந்த கலங்கள் மீள நிலைப்படுத்த காலம் தேவை.

எனவே கலங்களில் இறந்த வைரஸ்கள் தொற்றிருப்பதாக காட்டலாம். அதற்காக மக்கள் பீதியடையவேண்டிய அவசியமில்லை. மேலும் அவர்கள் ஊடாக தொற்று பரவும் அபாயமும் இல்லை.

மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வைரஸ் கல்ச்சர் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நேற்று 5 பேருக்கும் தொற்று என காட்டியது இறந்த வைரஸாக இருக்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம் என்றார்.