இராணுவ தளபதி நியமனம் தொடர்பில் நெருக்கடி – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக சமூகமும் உள்ளூர் செயற் பாட்டாளர்களும், அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா இராணு வத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு வரும் 29, 30ஆம் நாள்களில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற வுள்ளது,இந்தக் கருத்தரங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் இந்த நியமனம் குறித்து கவலை வெளியிட்டுள்ள நிலையில், இன்றைய ஊடக சந்திப்பை சிறிலங்கா இராணுவம் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.