இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வாசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி  ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும்,  சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.

தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.  இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.

இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதிக துருவநிலைப்படுத்தலுக்கு  வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கு வதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.

இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு,  சனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.