‘இபுபுரூபன்’ கொரோனா வைரஸ் சிகிச்சையில் சிறப்பான பங்காற்றும்- இங்கிலாந்து மருத்துவர்கள்

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரையை இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை நடத்தப்பட உள்ளது.  ‘இபுபுரூபன்’ என்ற மாத்திரை கொரோனா வைரஸ் சிகிச்சையில் சிறப்பான பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

காரணம், இது சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக பயன்படும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு வந்திருக்கிறது. தற்போது ‘இபுபுரூபன்’ மாத்திரை இங்கிலாந்தில் பெரும்பாலும் வலி நிவாரணியாகவும், அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகளை சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தரும்போது, வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படாது என இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே இப்போது லண்டனில் உள்ள கைஸ் மருத்துவமனை, செயிண்ட் தாமஸ் மருத்துவமனை, கிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை சேர்ந்த குழுவினர் இந்தமாத்திரையை நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.அதன்படி கொரோனா தொற்று உடையவர்களுக்கு லிபரேட் என்ற அழைக்கப்படும் சோதனை மூலம் வழக்கமான மருந்துகளுக்கு மத்தியில் கூடுதலாக இபுபுரூபன் மாத்திரைகளை கொடுத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்த மாத்திரையின் மூலம் கொரோனாவால் ஏற்படுகிற சுவாச பிரச்சினைகளால் அல்லாடுகிறவர்களுக்கு வென்டிலேட்டர்களுக்காக திண்டாடுவது முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.