இன அழிப்பை கொண்டாடும் சிங்கள இராணுவம்

தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் பத்தாவது ஆண்டு நிறைவை சிறீலங்கா படையினர் பல நாட்கள் கடந்தும் கொண்டாடி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 10ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இராணுவ ரணவிரு நடைபவனி ஆரம்பிக்கப்டுள்ளதுடன்  சுமார் 600 இராணுவத்தினர் இந்நடைபவனியில் பங்கு கொள்கின்றனர்.

யுத்த காலத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்பவர்களை சோதனையிடும் சோதனை நிலையம் ஒன்று மதவாச்சியிலிருந்தது. இந்த சோதனை நிலையத்திலிருந்தே நடைபவனி ஆரம்பமாகியது.

மதவாச்சி, அநுராதபுரம், திரிப்பன, மரதன்கடவல, ஹபரண, தம்புள்ள நாவுல, மாத்தளை, கட்டுகஸ்தோட்ட, கண்டி, பேராதனை, மாவனல்ல, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்த, கிரிபத்கொட, களனி, கிராண்ட்பாஸ், களனி, தெமட்டகொட ஊடாக இந்த அணிநடை கொழும்பைச் சென்றடைந்து, சுதந்திர சதுக்கத்தில் நிறைவு பெறும்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த அணிவகுப்பை ஆரம்பித்து வைத்தார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரின் போது அனைத்துலக போர் விதிகளை மீறி பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதுடன் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து முள்ளிவாய்க்காவில் போரை நிறைவு செய்திருந்தது சிறிலங்கா அரசு.

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் படை அதிகாரிகள் மீது அனைத்துலக நாடுளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.