இன்று நள்ளிரவு முதல் ஜம்மு கஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் தனித்தனியாக இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும்

ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமுலிற்கு வருகின்றது.

ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு கஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளைப் பிரித்து இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில நிர்வாகம் விதித்தது.

தொலைபேசி, செல்போன், இன்டநெட் சேவை, நாளேடுகள், ஊடகங்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதால், மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்ததனர். அரசியல் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால், பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் பிறந்த நாளான நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது. அதாவது இன்று(30) நள்ளிரவு 12 மணிமுடிந்தவுடன் அமுலிற்கு வருகின்றது.

kashmir 2 இன்று நள்ளிரவு முதல் ஜம்மு கஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் தனித்தனியாக இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும்இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். ஜம்மு கஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே.மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக நாளை காலை பொறுப்பேற்கவுள்ளனர். அவர்களுக்கு ஜம்மு கஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்தப் பதவியேற்பு விழாக்கள் ஸ்ரீநகர் மற்றும் லே நகரில் தனித்தனியாக நடைபெறும்.

ஜம்மு கஷ்மீர், டெல்லி, புதுச்சேரி போல சட்டப்  பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக விளங்கும். அதே சமயம் லடாக் என்பது சண்டிகர் போல சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும். யூனியன் பிரதேசம் என்பதால் இனிமேல் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருபகுதிகளும் வரும்.

அதுபோலவே நாட்டின் மற்ற பகுதிகளைப் போல இரு யூனியன் பிரதேசங்களும் இருக்கும். கஷ்மீரில் மற்ற மாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை உள்ளிட்ட முந்தைய கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கும்.

மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது இது முதன்முறையாகும். இதன் மூலம் நாட்டின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைகின்றது. அதேசமயம் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்கின்றது.

இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்தவரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாயின் பிறந்த நாளான நாளைய தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தின் ஜம்மு கஷ்மீர் பிரிப்பு அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வருகின்றது.

இதற்காக குஜராத் மாநிலத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடியும், டெல்லியில் நடைபெறும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொள்கின்றனர்.