இந்திய எல்லையருகில் சீன விமானம்

இந்திய – சீன எல்லைகளில் பதற்றம் நிலவி வரும் வேளையில், எல்லையிலிருந்து சுமார் 300 கி.மீற்றர் தொலைவில் இந்தியாவின் ரபேல் ஜெட்டிற்கு இணையான ஜெ- 20ரக போர் விமானத்தை சீனா நிறுத்தியுள்ளது.

இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களையடுத்து இந்தியாவும், சீனாவும் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. அதன் பின்னர் எல்லைப்பகுதிகளிலிருந்து படைகளை பின்வாங்குவதற்கும் ஒப்புக் கொண்டன.

அத்துடன் ஓகஸ்ட் 15ஆம் திகதி பிரதமர் மோடி, தனது சுதந்திரதின உரையில், இந்தியாவை சீண்டிப் பார்த்தால் தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் மற்றும் சீனாவை பெயர் குறிப்பிடாது எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில் இந்திய – சீன எல்லைக்கு அருகே சீன விமானப்படையைச் சேர்ந்த இரண்டு ஜெ – 20 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் எல்லையிலிருந்து 320 கி.மீற்றர் தூரத்தில், வடமேற்கு சீனாவின் பெய்ஜிங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் ஹோடன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெ – 20 போர் போர் விமானமானது நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டது. இந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை செயற்கைக் கோள் படங்களுடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெ -20 போர் விமானம் நவீன நான்காம் தலைமுறை விமானமாகும். ராடரில் சிக்காமல் நீண்ட தூரம் மறைந்து சென்று தாக்கக்கூடிய தன்மை கொண்டது.