இந்திய அரசியல் தேர்தல் பிரச்சாரமாகும் 7பேரின் விடுதலை

இந்தியாவில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. தேர்தல் பிரச்சாரங்களில் ராஜீவ் கொலைத் தண்டனைக் கைதிகள் தொடர்பான பேச்சே அதிகம் பேசப்படுகின்றது. அண்மையில் விக்கிரவாண்டி தேர்தல் தொகுதியில் சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

மேலும் தற்போது தமிழக ஆளுநர் 7 பேரின் விடுதலையை நிராகரித்தார் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கூறியதாக த இந்து நாளிதள் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல அரசியல்வாதிகள் தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், றொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7  தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். 7 தமிழர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதன் பின்னர் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் இருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இவர்களின் விடுதலைக்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அமைச்சரவை நிலைப்பாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

ஏழுபேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என்று அதிகாரபூர்வமற்ற வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னுடைய முடிவு குறித்து அரசிற்கு அவர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்றும் இந்து நாளேடு குறிப்பிட்டுள்ளது.

ஈழத் தமிழர் பற்றியோ, அவர்களின் நலன்கள் பற்றியோ இதுவரை பேசாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட இவர்களின் விடுதலை பற்றி பேசியுள்ளார்.

அவர் தனது ருவிற்றர் பதிவில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக ஆளுநர் முதலமைச்சரிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழ் மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என ஆளுநர் கூறியதாக வந்த செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உண்டு என்றும், இந்த விடயத்தில் அமைச்சரவையின் பரிந்துரையின்படி ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி ஆணையிட்டது. அதனடிப்படையில் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில், 2018 செப்டெம்பர் 6ஆம் திகதி உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலிற்கமைய ஏழுபேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஒருவருடத்திற்கு மேலாகியும் ஆளுநர் அதில் கையொப்பம் இடவும் இல்லை. அதை திருப்பி அனுப்பவும் இல்லை.

இதே வேளை தமிழக அரசு 2ஆவது தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்க வேண்டும். அதில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்க முடியாது.  நிச்சயம் கையெழுத்திட்டே ஆக வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை 2ஆவது தீர்மானத்தை அனுப்பவில்லை.

இப்போது அமைச்சரவைத் தீர்மானத்தை நிராகரிப்பதாக, வெறும் வாய்மொழியாகவே முதல்வர் எடப்பாடியிடம் ஆளுநர் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் தமிழ் நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல, மாறாக பாஜகவின் அரசமைப்பு சட்டத்திற்குப் புறம்பான ஆளுநரின் ஆட்சியே என்பது நிரூபணமாகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் கொலை தண்டனைக் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சீக்கியப் போராளிகள் 8பேரின் விடுதலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பை முன்வைத்து, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்வந்த்சிங் வழக்கை சுட்டிக்காட்டி அதே அளவுகோலின் அடிப்படையில் தங்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை றொபேட் பயஸ், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் தமிழ்க்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 30 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார். அதன் மீது டிஐஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் றொபேட் பயஸ் மனு தாக்கல் செய்தார். இதற்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி சிறைத்துறை டிஐஜி மற்றும் புழல் சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நவம்பர் 4ஆம் திகதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டுமென கூறி, விசாரணையை ஒத்தி வைத்தார்.

இந்தியாவில் இவர்கள் 7பேரின் விடுதலையை தங்கள் அரசியல் லாபங்களிற்காக பயன்படுத்தி வரும் அரசியல்வாதிகள், உண்மையில் இவர்கள் விடுதலை பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்களாக தெரியவில்லை. இவர்களின் விடயத்தை வைத்து கட்சிகளிடையே குற்றஞ்சாட்டுவதும், குறை கூறுவதுமாகவே இருந்து வருகின்றனர்.

உண்மையில் இவர்களின் விடுதலையில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், அதற்கேற்ற நடவடிக்கைகளை இவர்கள் முன்னின்று முழுமூச்சாக செய்திருக்க முடியும்.  தாம் முயற்சி எடுத்து இவர்கள் விடுதலை பெற்று விட்டால், அடுத்த தேர்தலிற்கு பிரச்சாரம் செய்வதற்கு விடயங்கள் இல்லாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர் போலவே தெரிகின்றது.