இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்;அமைச்சரவை ஒப்புதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 300 மில்லியனை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்நிதியில் நீர் வழங்கல், கழிவுநீர் கட்டமைப்பு, திண்மக்கழிவு, வடிகால் அமைப்பு, பயணிகள் முனையம், வெளியேறும் பிரிவு உட்பட விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படும்.

தற்போது விமான நிலையத்தில் தற்காலிக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரமே உள்ளது. ஓடுபாதை விளக்கு அமைப்பை நிர்மாணிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வர்த்தக விமானங்கள் மற்றும் சர்வதேச பயணிகளைக் கையாள கூடுதல் வசதிகள் தேவைப்படும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்படும். மேலும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு இந்திய அரசு வழங்கும் 300 மில்லியன் ரூபா மானியத்தைப் பயன்படுத்தவும் அதிகாரம் வழங்கப்படும்.

யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார்.