இந்தியாவில் ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்து வைகோ கண்டனம்

இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக புலம் பெயர்ந்து இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களை ஓர் குற்றப் பரம்பரையினர் போல இந்திய அரசாங்கம் நடத்துகின்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசின் தாக்குதலுக்கு அஞ்சி உயிர்ப் பாதுகாப்பிற்காக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை இந்திய அரசு பலவழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது. தமிழ் நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவது வழமையானதொன்று.

ஆனால் ஈழத் தமிழ் இளைஞர்கள் என்றாலே அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வந்தது. தற்போது அந்த முகாம் மூடப்பட்டதால், திருச்சியிலுள்ள சிறப்பு முகாம் என்ற பெயரில், திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி அங்கே அடைத்து வைத்திருக்கின்றது.

இந்த முகாமில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மலசலகூட வசதிகள்கூட ஒழுங்காக கிடைக்கவில்லை. இந்த முகாமில் உள்ள இளைஞர்கள் தமது இளமைக் காலம் முழுவதையும் கழிக்க வேண்டியுள்ளது. இதில் இருக்கும் கைதிகளுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் தமது வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

அண்மையில் இந்த முகாமிலிருந்த 3 இளைஞர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து வருகின்றது.

ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, கனடாவிற்குக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களை அந்தந்த நாடுகள் வரவேற்று மதிப்பளித்து உதவிகள் அளித்து குடியுரிமை வழங்கியிருக்கின்றது. அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையொப்பம் இடவில்லை.

ஆனால் இந்தியாவில் குடியுரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களின் விண்ணப்பங்களை 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

எனவே இந்தியாவிலுள்ள ஈழத் தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களை அடியோடு மூடவேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்