இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயற்படாது- கோத்தபயா

இந்தியாவிற்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயற்படாது என தற்போது பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்தது தவறான நடவடிக்கை என கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவுடன் எப்போதும் நட்புறவுடன் இணைந்தே இலங்கை செயற்படும். இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் இலங்கை செயற்படாது. இலங்கை ஒரு நடுநிலை நாடாகவே இருக்கும்.

இந்தியா, சீனா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என அனைத்து நாடுகளுமே இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். இலங்கையில் முதலீடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் அனைத்து நாடுகளைப் போல சமமானதாக இருக்கும்.

முந்தைய ஆட்சிக் காலங்களில் அம்பாந்தோட்டையை சீனாவிற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்தது ஒரு தவறான நடவடிக்கை என்பதை ஒப்புக் கொள்கின்றேன். தமிழ், சிங்கள மக்களுக்கு தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை முட்டாளாக்குகின்றனர். வளர்ச்சி என்கின்ற செயற்பாட்டின் மூலம் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். நான் எந்த ஒரு இனத்திற்கும் எதிரானவன் அல்ல.

பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது கட்டுப்பாடுகளுடன் பணியாற்றியதால் நான் கடும் போக்காளனாக சித்தரிக்கப்படுகின்றேன். ஆனால் அப்படியான கூற்றுகள் பொய் என்பதை மக்கள் விரைவில் உணருவார்கள். இவ்வாறு கோத்தபயா ராஜபக்ஸ அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

சீனாவுடனான உறவில் இலங்கை எடுக்கும் ஒவ்வொரு விடயத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்தவாறே இருக்கின்றது. மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோது சீனாவுக்கு பெரும் சலுகைகள் கிடைத்தன. பெய்ஜிங் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை அளித்தது. அது இலங்கையில் துறைமுகங்களையும் நெடுஞ்சாலைகளைகளையும் உருவாக்க உதவினாலும் நாட்டை ஆழமான கடனில் மூழ்கடித்தது.

கடன் பொருளாதாரத்தை கீழே இழுத்துச் சென்றது. மேலும், 2017 ஆம் ஆண்டில் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமப்பட்ட இலங்கை அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் 99 ஆண்டுகளுக்கு சீனர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் சீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படாத வருகைகளை மேற்கொண்டன.

இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் இருந்தபோது, இலங்கையில் சீன நீர்மூழ்கிக் கப்பல் அடிக்கடி வருகை தருவதற்கு புது டெல்லி எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கு இலங்கை அரசாங்கம், இதில் அசாதாரணமானது எதுவுமில்லை என்று கூறியதுடன், பல நாடுகளின் இராணுவக் கப்பல்கள் பல ஆண்டுகளாக இலங்கைக்கு நல்லெண்ண வருகைகள், எரிபொருள் நிரப்புதல் மற்றும் குழு புத்துணர்ச்சி ஆகியவற்றிற்காக வந்துள்ளன என்றது.

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே இந்திய அரசாங்கம், தனது வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி, கோத்தபயா ராஜபக்ஸவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. கோத்தபயா அதற்கு சம்மதம் தெரிவித்து எதிர்வரும் 28ஆம் திகதி இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா வரவிருக்கின்றார்.

இந்திய விஜயத்தை முடித்த பின்னர் சீனாவிற்கான விஜயத்தையும் கோத்தபயா மேற்கொள்ளவுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால், கோத்தபயா தனது நாட்டிற்கு தேவையான நிதி, மற்றும் உதவிகளை சீனாவிடமிருந்து பெறுவதில் இந்தியா எந்த இடையூறும் செய்யாதிருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காகவே இந்தியாவிற்கு தனது முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்கின்றார்.

இந்தியாவை தனது கைக்குள் போட்டுக் கொண்டாலே, இலங்கை வாழ் தமிழர்கள் மீது தான் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா கண்டுகொள்ளாது என அவர் நம்புகின்றார் போலும். அவரின் எதிர்பார்ப்பு சரியாக இருக்கலாம். ஏனெனில் இந்திய மத்திய அரசு தனது நாட்டிலுள்ள தமிழகத்திற்கே  பூரண சலுகைகளை வழங்க மறுக்கின்றது. தமிழக அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் மோடியின் மத்திய அரசு செயற்படுவதில்லை.

உதாரணமாக ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலையைக் கூறலாம். அத்துடன் மாணவர்களின் நீட் தேர்வு நடைமுறையை இரத்துச் செய்யும்படி தமிழக அரசு கோரியுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த தேர்வினால் பல பெற்றோர்களும், மாணவர்களும் மரணித்துள்ளனர். அப்படியிருந்தும் அந்த தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு அடம் பிடிக்கின்றது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இந்திய மத்திய அரசு கோத்தபயா ராஜபக்ஸவிற்கு உதவி செய்யலாம் என தமிழக  மக்களும், ஈழ மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் நம்புவதுடன், பெரும் அச்சத்திலும் வாழ்கின்றனர்.

தமிழக அரசியல்வாதிகள் கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வருகை தரும் தினம் அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தில்லியில் கறுப்புக் கொடிபோராட்டம் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.