இந்தியாவின் அத்துமீறல் – தொடர்ந்தும் பல அரசியல் தலைவர்கள் கைது

காஸ்மீர் பகுதியில் 370 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிய பின்னர் இந்திய அரசு ஜனநாயகத்திற்கு விரோதமாக அங்குள்ள அரசியல் தலைவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லீம் மக்களை அதிகமாகக் கொண்ட இந்த பகுதியின் மூன்று முன்னாள் முதல்வர்கள் உட்பட பெருமளவான அரசியல் தலைவர்களை இந்திய அரசு கைது செய்துள்ளதுடன், பொதுமக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

ஜம்மு மற்றும் காஸ்மீர் மக்களின் இறைமையை சீர்குலைக்கும் வகையில் கடந்த 5 ஆம் நாள் 370 ஆவது சட்டம் நீக்கப்பட்டது தொடக்கம் எத்தனை அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரங்களைப் பெறமுடியாதுள்ளதாகவும், ஆனால் தொடர்ந்து கைதுகள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இந்த நடவடிக்கை காஸ்மீர் பகுதியிலும், பகிஸ்தானுடனும் பதற்றங்களைத் தோற்றுவித்துள்ளது.

காஸ்மீரின் அதிக ஆளுமையுள்ள அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த பாரூக் அப்துல்லாவை இந்திய அரசு கடுமையான பாதுகாப்புக்களுடன் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. அவர் 3 தடவைகள் முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் என்பதுடன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

அதேசமயம், மூன்றாம் தலைமுறை அரசியல் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓமார் அவர்களையும் இந்திய அரசு கைது செய்துள்ளது. இவர் காஸ்மீர் தேசிய பேரவையின் தலைவராவார்.

இந்திய அரசுக்கு சார்பான இவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிய ஜனதாக் கட்சியின் அமைச்சராக இருந்தவர் ஆனால் தற்போது இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக செயற்பட்டுவருபவர்.