இது வெறும் வீடல்ல…! பிரபா, கிட்டு, பொட்டுவின் நினைவுச் சின்னம்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாவீரர், முன்னாள் போராளிகள், செஞ்சோலைப் பயனாளிகள் முதலானோர் குடும்பங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பண்டிதரின் (சின்னத்துரை இரவீந்திரன்) தாயார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேவேளை ஞானசார தேரர் சுதந்திரமாக உலா வருகிறார். எனவே சட்டம் புரியாத சாதாரண மக்களாகிய நாம் மிக எச்சரிக்கையுடனேயே எமது கருத்துக்களை, எதிர்பார்ப்புக்களை வெளியிட வேண்டியுள்ளது.

“பிரபாகரன், கிட்டு, பொட்டு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற நெடுமாறன் ஐயாவும் வந்துபோன வீடு இது. அவையின்ர காலடிபட்ட ஒரு நினைவுச் சின்னமா இருக்கிற இந்த வீட்டை மாவீரற்ற ஆன்மாக்கள் எண்டாலும் மீட்டுத் தர வேணும்”, என்று கண்ணீருடன் புலம்புகிறார் பண்டிதரின் அம்மா. “நாங்கள் வட்டுவாகலிலேயே போய்ச் சேர்ந்திருக்க வேணும். இதை எல்லாம் காண வேணும் எண்டு தலையெழுத்து”, என்று இடிந்து போய் நிற்கிறார்.

இடப்பெயர்வைக் கண்டிருப்பம். சாமான் சக்கட்டைக்கட்டி, கொண்டு போகேல்லாதததைக் கழிச்சு வெளிக்கிட ரெண்டு, மூண்டு மணித்தியாலம் செல்லும். ஆனா… ஒரு மணித்தியாலத்துக்குள்ள வெளிக்கிட வேணும் எண்டு சொல்லி வீட்டுச் சாமானெல்லாம் தூக்கி…”, என்று அந்தக் காட்சியை மனதில் கொண்டு வந்து விபரிக்கின்றனர் குடும்பத்தினர்.

சுற்றுப் புறங்களை பார்த்தால் பயன்தரும் வாழை மரங்கள் வெட்டுப்பட்டுக் கிடக்கின்றன. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அலங்கரிப்புக்கு வாழை மரங்களை வெட்டாதீர்கள் எனப் புலிகள் விடுத்த அறிவிப்பு நினைவுக்கு வந்தது. நீதிமன்றம்தான் இந்தச் சொத்து அவர்களுக்குரியது என்று சொல்லி விட்டதே. அப்படியாயின் காணியில் உள்ள வாழை, முருங்கைகளும் அவர்களுக்குத்தானே. அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தில் ஒரு காட்சி. தனது மனைவி சந்திரமதியை விலை கூறி விற்று விடுவான் அரிச்சந்திரன். வாங்கிய ஐயர் மகன் லோகிதாசனையும் இழுப்பார். கேட்டதற்கு “மாடு வாங்கினால் கன்றும் எனதுதானே?”, என்று வாதிடுவார். அதுபோல காணியே கைமாறும்போது வாழை, முருங்கை மரங்களை வெட்டத் தேவையில்லைத்தானே என்ற கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படியாயின் இந்தச் சொத்தின் உரிமை குறித்து அவர்கள் மனதில் ஏன் நம்பிக்கை பிறக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகின்றது.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு கருத்தும் கவனத்தைப் பெறுகிறது. ஸ்ரீதர் தியேட்டர் தொடர்பானது இது. “அடாத்தாக ஒரு இடத்தில் 10 வருடங்கள் இருந்தாலே அதனை உரிமை கோர இடமுண்டு. ஆனால் நான் இங்கே 20 வருடங்களாக இருக்கிறேன்.”, 2018 ஜூலை 4-10 எதிரொலி வார இதழில் இக்கருத்து வெளியானது. (உண்மையான உரிமையாளர் வந்தால் தான் அதனைக் கையளிக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.)

“யாரொடு நோவோம்; யார்க்கெடுத்துரைப்போம்” என்ற தலைப்பில் பரவலாக இணையத்தளங்களில் வெளியான கட்டுரை ஒன்று வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களில் எவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை. மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்பங்களில் அவலநிலை பற்றியது அது. தமது குடும்பத்தினருக்காகப் போராளிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்ட காணிகள் முன்னைய உரிமையாளர்களால் அபகரிக்கப்பட்டமை பற்றியும் இவ்வாறு பாதிக்கப்பட்ட சிலரது விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

உதாரணத்திற்கு தினேஸ் மாஸ்ரரின் வீடு பற்றியது. இவர் கிளிநொச்சி கணேசபுரத்தில் ஒரு காணியை வாங்கினார். எந்தக் காலத்திலாவது புகையிரதம் ஓடும் எனக் கூறிய அவர், அதற்கேற்றவாறு உறுதியான அத்திபாரம் போட்டு மாடி வீடொன்றைக் கட்டினார். பின்னாளில் வடக்கு மாகாண சபை உறுப்பினராக விளங்கிய சு.பசுபதிப்பிள்ளைதான் இக்காணியை வாங்குவதற்கு தொடர்பாளராக இருந்தார். இறுதிப் போரில் தினேஸ் மாஸ்ரர் ஆகுதியானதும், அந்த வீட்டில் இருந்த தினேஸ் மாஸ்ரரின் மாமியாரை விரட்டி விட்டு அக்காணியையும் வீட்டையும் அபகரித்துள்ளார் முன்னாள் பொலிஸ்காரரான மச்சேந்திரராசா. இவ்விடயமாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பசுபதிப்பிள்ளையிடம் விசாரித்துள்ளனர். அவரும் நடந்ததைக் கூறினார். தன்னைப் பயமுறுத்தியே காணியை வாங்கியதாக மச்சேந்திரராசா கூறினார். முதலில் இந்த வீட்டையே தானே கட்டியதாகச் சொன்னார். இன்றுள்ள சூழலில் பலவந்தமாகத் தன்னிடம் காணியை வாங்கியதாக அவர் சொல்வதை நீதிமன்றம் நம்பக்கூடும்.

மலையாளபுரத்தில் அமைந்திருந்த செஞ்சோலை தமது வளாகத்திலிருந்து சகல உடைமைகளையும் ஏற்றிக் கொண்டு, வள்ளிபுனத்துக்குப் புறப்பட்டனர் செஞ்சோலைப் பிள்ளைகளும் பராமரிப்பாளர்களும். (இறுதியுத்தத்தின்போது) அச்சமயம் ஒரு முதியவர் தன்னிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட காணியின் பெயரால் இன்னமும் ஒரு இலட்சம் ரூபா தர வேண்டியுள்ளது என்று சொன்னார். இவ்விடயமாக தலைவர் பிரபாகரனின் கவனத்துக்கும் கொண்டு போயிருந்தார். மிகுதித் தொகையைக் கொடுத்து விடுமாறு அவரும் செய்தி அனுப்பியிருந்தார். அதற்கமைய அத் தொகை அம் முதியவரிடம் வழங்கப்பட்டது இன்று மலையாளபுரக் காணிகளுக்கு உரிமைகோரி வந்திருப்போரில் அவரும் ஒருவர்.

இக்காணிகளின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத் திட்டமும் கிடைத்தது. காணிச் சட்டத்தின்படி ஒருவருக்கு அரச காணி ஒரு இடத்தில்தான் வழங்க முடியும். அதன் பிரகாரம் காணியும் வீட்டுத் திட்டமும் பெற்றவர்கள் பழைய காணியும் கோருகின்றனர். அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவர்கள் முறைப்பாடு செய்தனர். அவர்கள் பழைய உரிமையாளர்களிடமே காணிகளை ஒப்படைக்குமாறு பிரதேச செயலருக்கு அறிவித்தனர் எனவும் செய்திகள் தெரிவித்தன. இந்த விவகாரம் தற்போது இழுபறியாக உள்ளது.

அடுத்த விடயம் பரம்பரைக் காணிகள் தொடர்பானது. பொட்டம்மான் குடும்பத்தினருக்குச் சொந்தமான இரு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. எந்தச் சட்டபூர்வமான ஆவணமும் இல்லாமல் இக்காணிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது மின்சார சபை. ராஜேஸ்வரி வீதி, இராமநாதன் வீதிச் சந்தியில் உள்ள வீட்டுடனான காணி பொட்டம்மானின் சகோதரிக்கு சீதனமாக வழங்கப்பட்டது. அகில இலங்கைக் கம்பன் கழகம் ஆரம்பிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டதும் இந்த வீட்டில்தான்.

இந்த வீட்டில் பொட்டுவின் அண்ணன் சிவஞானகுமார் நாட்டுக்கு வரும் சமயங்களில் தங்குவது உண்டு. இந்தக் காணியில் தாங்கள் இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஒரு அடாவடிக் குடும்பம் குடியேறியுள்ளது. அந்தக் குடும்பத்துக்கு இந்த வீட்டின் ஒரு அறையில் சிவஞானகுமார் தங்குவது பிடிக்கவில்லை. விளைவு அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்அவர். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் வீதியில் விழுந்து மரணமானார். அதன்பின் அந்தக் குடும்பம் முழுமையாக ஆக்கிரமித்து தனது வெற்றிக் களிப்பை அடிக்கடி வெளிப்படுத்தியது. இக்காணியின் உரிமம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களில் எவருமோ கவனம் செலுத்தவில்லை. தேர்தல் சமயத்தில் சிவஞானகுமார் மரணித்திருந்தால் சிலவேளை தேசியத்தின் பெயரால் பலரும் கவனமெடுத்திருப்பார்களோ?

அடுத்தது, கனகரட்ணம் வீதிக் காணி. இதில் அடாத்தாகப் புகுந்த ஒரு பெண்மணி தனது இரண்டாவது கணவனுடன் குடும்பம் நடத்தினார். தற்போது மூன்றாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். (இக்கட்டுரை அச்சுக்குப் போகும்வரை) சனசமூக நிலையங்கள், பொது நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள், கிராமசேவை அலுவலர்கள் முதலான சகலருக்கும் இந்த இரு காணிகளின் ஆக்கிரமிப்புப் பற்றித் தெரிந்தும் தமக்கும் புலி முத்திரை குத்தப்படும் என்றெண்ணி ஊமையராகவும் செவிடராகவும் நடந்து கொள்கின்றனர்போல உள்ளது.

மட்டக்களப்பு நாவற்கேணியில் போராளி இளங்கோ (மேரிதாஸன்) தனது மனைவியின் பெயரில் ஒரு காணியை வாங்கினார். கடமையின் நிமித்தம் திருமலைக்குச் சென்ற இடத்தில் இராணுவ முற்றுகையில் சிக்கி உயரிழந்தார். நிறைமாதக் கர்ப்பவதியான தனது மனைவியின் வேண்டுகோளைப் புறக்கணித்து கடமையே பெரிதெனப் பணியாற்றிய அவர் தனது மூன்றாவது பிள்ளையை (தேன்மொழி) கண்ணாலும் காணவில்லை. காலவோட்டத்தில் இந்தப் பிள்ளையும் போராளியானது. இளங்கோவின் காணியை அயலவரான தியாகராஜா என்பவர் தனது காணியுடன் இணைத்திருந்தார். சுனாமியின் அழிவுகளைப் பார்வையிடச் சென்ற இளங்கோவைத் தெரிந்த ஊடகவியலாளர் அங்கு சென்றார். இந்த ஆக்கிரமிப்பை அவதானித்திருந்தார். இது பற்றிக் கேட்டபோது, “சுனாமி வீட்டுத் திட்டத்திற்குக் காணி எடுக்கிறார்கள். அதனால்தான் வேலியை வெட்டி எனது காணியுடன் இணைத்துள்ளேன். இளங்கோ குடும்பத்தினர் வந்து கேட்டால் உடன் வழங்குவேன்”, என்றார்.

இறுதி யுத்தத்தில் எல்லோரும் செத்துத் தொலைந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஏதோ ஒரு மோசடி செய்து காணியை விற்றுவிட்டார். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்ததும் தமிழரசுக் கட்சியின் செயலர் கிழக்கின் விவசாய அமைச்சரனார். அவரிடம் சென்ற இந்த ஊடகவியலாளர் ஒரு மாவீரர் குடும்பத்தின் காணி மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

சம்பந்தப்பட்டவரின் பெயரைக் கேட்டார் அமைச்சார். “தியாகராசா”, எனப் பதிலளித்ததும், “சின்னவனா”, என்று வினாவினார். “ஆம்”, என்றதும் அமைதியாகி விட்டார். சின்னவன் என்பவர் அமைச்சருக்காக தேர்தல் வேலை செய்தவர். மாவீரர் குடும்பத்தினருக்குப் பரிகாரம் காண்பதை விட அடுத்த தேர்தலிலும் தனக்காக வாக்கு வேட்டையாடக்கூடிய ஒருவரின் உறவே அமைச்சருக்கு முக்கியமாகிற்று. இப்படியாக தமிழ் அமைச்சர்கள் முதல் பெரும்பாலான கட்டமைப்புகள் மாவீரர் குடும்பங்களை முகவரி இல்லாமல் ஆக்கவே முயல்கின்றன. எதிர்வரும் தேர்தலுக்காக – தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக காசி ஆனந்தனின் கவிதைகளைப் பாடிக் கொண்டு வாக்கு வேட்டைக்கு வருவோரே தவிர மாவீரர் குடும்பத்துக்கு உதவ முன்வர மாட்டார் செயலர்.

இந்தக் கோளாறுகளின் உச்சம் தலைவர் பிரபாகரன் குடும்பத்தினரின் காணி அபகரிப்பு. இதன் போதும் தேசியவாதிகள் அனைவரும் மௌனம் காத்தனர். திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி வவுனியா புளியங்குளத்தில் 200 கி.மீ. அடையாளக் கல்லுக்கு எதிரே உள்ளது. அதனைப் புத்தளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டானியல் கிறிஸ்ரி என்பவர் அபகரித்துள்ளார். (முன்னர் இந்த இடத்தில் கள்ளுத் தவறணை இருந்தது) இவரது மனைவி சரியாக தமிழ் தெரியாவிட்டாலும் தமிழே தனது பூர்வீகம் என்கிறார். ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியாவில் தங்க வைக்கக்கூடாது என முழக்கமிட்ட அரசியல்வாதிகள் பிரபாகரனின் காணி பறிபோவதைக் காணாமல் இருந்தமையை என்னவென்று சொல்வது.WhatsApp Image 2020 03 13 at 17.48.21 இது வெறும் வீடல்ல…! பிரபா, கிட்டு, பொட்டுவின் நினைவுச் சின்னம்

வட மாகாண ஆளுநர் காணிப் பிணக்குகள் தொடர்பாகக் குழுவொன்று நியமித்துள்ளார் எனத் தெரிய வருகிறது. எப்படியும் போராளிகள் ஆயுத முனையிலேயே காணி வாங்கியதாக சிலர் வாதிடக்கூடும். எனினும் உண்மையைக் கண்டறிய வேண்டும் வடக்கு ஆளுநர். விசேட கவனம் இதில் செலுத்தாது விட்டால் மாவீரர், போராளிகள் குடும்பங்கள் பாதிக்கப்படும். நிலை நிச்சயம் தோன்றும்.

எது எவ்வாறாயினும் பண்டிதர் அம்மா குறிப்பிட்டது போல அந்த நினைவுச் சின்னத்தை எப்படியும் பாதுகாக்க வேண்டும். என்ன விலை கொடுத்தேனும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

 

நன்றி- தாரகம்