இணக்க அரசியல் என்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல் அரசின் காலடியில் வீழ்ந்து கிடப்பதல்ல-சுமந்திரன்.

”இணக்க அரசியல் என்றதும் பலர் நினைப்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல எந்த அமைச்சு பதவி தந்தாலும் அரசின் காலடியிலேயே போய் விழுந்து கிடப்பதையே. ஆனால் அதுவல்ல இணக்க அரசியல்” எனக் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்  மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் நடந்த சந்திப்பு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

பிரதமரைச் சந்தித்ததை இணக்க அரசியல் என்று சொல்லக்கூடாது. இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்குமே இருக்கின்றது. ஏன் உலக நாடுகளுக்குமே இருக்கின்றது. அதை நாங்கள் பொறுப்போடு செய்கின்றோம் .

ஏனைய விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். நாட்டில் ஒரு தீர்வு ஏற்படவேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் அதற்கு இணங்கி வரவேண்டும். அந்த இணக்கத்தைப் பெறுவதையும் அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு அரசோடு சேருவதையும் ஒன்றாகக் கணிக்கக்கூடாது.

இணக்க அரசியல் என்றதும் பலர் நினைப்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல எந்த அமைச்சு பதவி தந்தாலும் அரசின் காலடியிலேயே போய் விழுந்து கிடப்பதென்று. அதுவல்ல நாங்கள் எதிர்பார்க்கின்ற இணக்க அரசியல்.