ஆலயம் மீது செல்வீச்சு – நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நினைவுநாள்

யாழ் மாவட்டம் வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது சிறிலங்கா படையினர் செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்ட துன்பியல் நிகழ்வின் 32 ஆவது ஆண்டாகிய நேற்று 29/05/2019 புதன்கிழமை படுகொலைக்குள்ளான பொதுமக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘ஒப்பிரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராசி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்திருந்தார்கள்.f 1 ஆலயம் மீது செல்வீச்சு - நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நினைவுநாள்

சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் உரிமை கோரப்படாத பதின்மூன்று உடலங்கள் உள்ளிட்ட சிதைவடைந்து உருக்குலைந்து போயிருந்த பலரது உடல் சிதைவுகளையும் ஓரிடத்தில் போட்டு ஆலய நிர்வாகத்தினரால் எரியூட்டப்பட்டிருந்தது.

இத்துன்பியல் சம்பவத்தின் 32 ஆவது ஆண்டை முன்னிட்டு வடமராட்சி மக்கள் சார்பில் குறித்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில், படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசை வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நெய்த் தீபம் ஏற்றி வழிபாடு தொடர்ந்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.