ஆயுதம் தாக்கிய படையினரால் நடத்தப்படும் உடற்சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சிறிதரன்

இந்துக்களின் கலாசாரத்தை உதாசீனம் செய்யும் வகையில் நல்லூர் ஆலய வளாகத்தில் ஆயுதம் தாக்கிய இராணுவத்தினரால் நடத்தப்படும் உடற்சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கைவிடுத்தார்.

வடக்கில் குண்டு வெடிப்புக்களோ வன்முறைகளோ இடம்பெறாத நிலையில், யாழ்ப்பாண வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நல்லூர் திருவிழாவில் பக்தர்கள் இராணுவத்தினரால் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலயத்துக்குச் செல்பவர்களை உடலியல் ரீதியாகப் பரிசோதனை செய்து அனுப்பிய வரலாறுகள் இல்லை. திருவிழா ஆரம்பிக்கப்பட் நாளிலிருந்து கலாசாரத்தை அடையாளப்படுத்திச் செல்லும் தமிழர்கள், இராணுவத்தினரின் சோதனைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் உள்ளாகின்றனர்.

ஆலயவாளாகம் என்பது காலணிகளுடன் செல்ல முடியாத புனித வலயமாகப் பேணப்படுகிறது. இந்தப் புனித வலயப்பகுதியில் இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களுடனும்.ஆயுதங்களுடனும் நின்று பக்தர்களை உடற்சோதனைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இவ்வாறு பாதுகாப்பு வழங்குமாறு ஆலய நிர்வாகமோ, யாழ் மாநகர சபையோ அல்லது நாமோ இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கவில்லை.