ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் போதும்: டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும்  பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம்இ நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் உள்நாட்டு பாதுகாப்பு படையினரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்இ ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரை நான் நினைத்தால் 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது:-

நான் நினைத்தால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் தலிபான் பயங்கரவா திகளுக்கு எதிரான போரை 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்தால் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழப்பார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருப்பார்கள். ஆனால் நான் பொதுமக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை.

மேலும்  தலிபான் அமைப்புகளுடன் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் நிலவுகிறது. பேச்சுவார்த்தையின் மூலமே பயங்கரவாதத்தினை ஒழிக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.