ஆக்கிரமிப்புத் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது சிறிலங்கா காவல் துறை தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றிருந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.முல்லைதீவினை சேர்ந்த குமணன் எனும் ஊடகவியலாளரே முல்லைதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.
அங்கு விகாரதிபதியால் அத்துமீறி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அங்கு ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்ள் மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் இன்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த விகாரதிபதிக்கு ஆதரவாக காவல்துறை செயற்படுவதான குற்றச்சாட்டின் மத்தியில் இன்று கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இலங்கை காவல்துறையினர் இன்று கண்காணிப்பு கமராவை அகற்றவும் பெயர் பலகையினை பொருத்தவும் முற்பட்டமை தொடர்பாக அறிக்கையிட சென்றிருந்த போதே வீரகேசரி பத்திரிகை செய்தியாளரான குமணன் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுமுள்ளார்.
அதன் பின்னராக அங்கு வந்திருந்த கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி தூசணத்தினால் திட்டி தாக்கியதாக தெரியவருகின்றது.
குமணனால் வீரகேசரி பத்திரிகையில் அறிக்கையிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலேயே இன்று ஆலய அறங்காவலர் சபையினால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டிருந்தது.
வடமாகாண ரீதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான அறிக்கையிடலில் குமணன் முதலாமிட பரிசை தட்டிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.