அரச இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாக காரணம் என்ன? பாதுகாப்புச் செயலாளர் விளக்கம்

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே, அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் தெரிவித்ததாவது;

“இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையில் இணைய பாதுகாப்புத் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) காணப்படுகின்றது. அத்துடன், விமானப்படையினரின் கணினிப்பிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயலாற்றுகின்றன.

இந்த நிலையில், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வழங்கியுள்ளது. பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதனை பின்பற்றியுள்ளன.

எனினும், ஒரு சிலர் அதனைப் பின்பற்றவில்லை. உரிய நேரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாக குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாக நாங்கள் பார்க்கின்றோம்” என்றார்.