அரசுத்தலைவர் தேர்தல்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைள்

அரசுத்தலைவர் தேர்தலில் தாம் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், இதற்காக போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைச் சந்திக்க 4 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் உபதலைவர் கா.குலசேகரம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் தென் ஆபிரிக்க அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகள் சட்டத்தையும் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அரசியல் கைதிகள் பொதுமன்னிப்புடன் விடுதலைசெய்யப்படவேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மைத் தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்க முன் இருந்த இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனைய அனைத்து முகாம்களும் மூடப்பட வேண்டும். இன –மத குரோதங்களை தூண்டும் செயற்பாடுகளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் வேலைவாய்ப்புக்களுக்கான நியமனங்களை அந்தந்த மாகாணத்தவருக்கு  முன்னுரிமை வழங்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனர்த்தங்களினாலும்,வேறு வகையிலும் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணங்கள் வழங்க வேண்டும். தமிழீழ வைப்பகத்தில் அடகுவைக்கப்பட்ட மற்றும் கடனாக வழங்கப்பட்ட நகைகளின் ஒருபகுதி கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த வருமானமுடையவர்களுக்கு  முன்பிருந்தது போல இலவசமாக அல்லது குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வேட்பாளர்களுடன் பேசவுள்ளதாக அக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.