அமைதிக்கான நோபல் பரிசு பெறுகிறார் எதியோப்பிய பிரதமர்

அமைதிக்கான நோபல் பரிசு, எதியோப்பியா பிரதமர் அகமது(43) வுக்கு வழங்கப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு, ஆப்ரிக்க நாடான, எதியோப்பியாவின் பிரதமர் அபே அகமதுக்கு வழங்கப்படுவதாக, விருது குழுவினர் அறிவித்துள்ளனர்.

அண்டை நாடான எரித்ரியாவுடனான, 20 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த எல்லை பிரச்னையை தீர்த்து வைத்ததற்காகவும், சர்வதேச ஒத்துழைப்புக்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்காகவும், அகமதுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைதிக்கான, 100வது நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும், அகமதுக்கு கிடைத்துள்ளது. இந்தப் பரிசு, தங்க பதக்கம் மற்றும், 6.52 கோடி ரூபாய் ரொக்கம் கொண்டது.

அகமது, கடந்த ஆண்டு, எதியோப்பியாவின் பிரதமராக பொறுப்பேற்றது முதல், பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த, எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்தார். நாட்டில், அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்.