அமைச்சுப் பதவிகள் அல்ல ; தனிநாடுதான் கூட்டமைப்பின் நோக்கம்; பேராசிரியர் பீரிஸ்

“அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பிய தனிநாடு பெறுவதே கூட்டமைப்பின் இலக்கு” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தனிநாட்டையே கோரிநிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் வளமான எதிர்காலத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கவே அரசு விரும்புகின்றது. ஆனால், கூட்டமைப்பினர் இன்னமும் புலிகளின் சித்தாந்தத்திலேயே மூழ்கி இருக்கின்றனர். ஆயுதத்தால் புலிகள் அடைய முடியாததை நாடாளுமன்ற ஆசனத்தின் மூலம் கூட்டமைப்பினர் எவ்வாறு பெறப்போகின்றனர்?

இது ஒருபோதும் இயலாத காரியம். இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கவும் மாட்டோம். எனவே, புலிகளின் கோரிக்கைகளைக் கைவிட்டுவிட்டு அரசுடன் இணைந்து பயணிக்கக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும்” என்றார்.