அமெரிக்க போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்க அல்கொய்தா முயற்சி

அமெரிக்காவில் அண்மையில் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் பிளெய்ட் என்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அமெரிக்கருக்கு சார்பாக நடைபெறும் போராட்டங்களை அல்கொய்தா அமைப்பினர் தங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிஹாதி குழுவினரான அல்கொய்தா அமைப்பினரின் மின்னிதழான “உள் உம்மா“வின் அண்மைய பதிப்பில் உயிரிழந்த ஜோர்ஜ் பிளெய்ட்டின் கடைசி நிமிடங்களை சுட்டிக்காட்டும் படமும், பிரபல சுவர் ஓவியரான பேங்சியின் ஓவியமும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த மின்னிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், அமெரிக்க அரசு இனவெறிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. இதனால் விரைவில் அமெரிக்காவும் அதன் அரசியல் தலைமைகளும் பொருளாதார அமைப்புகளும் அழிந்து விடும். அமெரிக்கா எங்கும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு போர் ஆகியவை நடக்க வாய்ப்புள்ளது. ஜனநாயகக் கட்சிகளால்கூட அமெரிக்கர்களுக்கு உதவ முடியாது. நாங்கள் உதவுவோம். நாங்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக இருப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.