அமெரிக்காவுக்கு அடிபணிந்த இந்தியா; வர்த்தக உறவுகள் பாதிப்படையும் என்கிறது ஈரான்.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா  நிறுத்தியது  தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் அலி செகேனி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகாரபூர்வமாக நிறுத்தியது. இதற்கு காரணமாக தேசத்தின் நலன் என கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்ததால் எங்களால் (ஈரான்) இந்தியாவுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் இறக்குமதியில் கிடைக்கும் தொகையில் தான் இந்தியாவில் வர்த்தகம் செய்கிறோம். அதையும் நிறுத்தினால் இந்தியாவிடம் இருந்து எப்படி பொருள் வாங்க முடியும். அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தாலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன. இவர்களை போல் இந்தியாவும் தேச நலனுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும்.

அமெரிக்கா விதித்துள்ள தடையை இந்தியா ஆதரிக்கக் கூடாது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் சபாஹர் துறைமுகத் திட்டம் மற்றும் வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும். இவ்வாறு அலி செகேனி கூறினார்.