அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை – பூமிகன்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கிடையேயான ஒரு போட்டிக்களமாக வல்லரசு நாடுகள் இலங்கையைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் மைத்திரி -ரணில் எனப் பிளவுபட்டிருப்பதும் வல்லரசு நாடுகளுக்கு உதவுகின்றது. இது இலங்கையின் இராசதந்திரத்துக்கு புதியதொரு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

ஈஸ்டர் குண்டு வெடித்த பின்னர் அவசரமாக இலங்கைக்குத் தேவையான புலனாய்வு உதவிகளை வழங்குவதில் அவசரமாக முன்வந்த நாடு அமெரிக்காதான். ஐ.எஸ். அமைப்புடன் அமெரிக்கா ஏற்கனவே போரை நடத்தியிருப்பதால், அது குறித்த அனுபவமும், அறிவும் அவர்களுக்கு உள்ளது. இலங்கையும் உடனடியாகவே அமெரிக்காவை அணுகியது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ. அவசரமாக தமது நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

ஐ.எஸ். அமைப்பை அடக்குவதற்கு உதவுவதுதான் அமெரிக்காவின் இந்த உடனடியான செயற்பாட்டுக்குக் காரணம் என வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதில் மறைமுகமான காரணம் ஒன்றும் இருந்தது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான ஒன்று. அதற்கான ஒரு பதில் செயற்பாடாகத்தான் இலங்கைக்கு உடனடியாக உதவிகளுடன் அமெரிக்கா விரைந்தது.

இது வெறுமனே ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக மறைந்துபோகக் கூடாது என்றால், இலங்கையுடன் ஏதோ ஒரு வகையான பாதுகாப்பு உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டும். அதன் மூலமாகவே இலங்கையில் தொடர்ந்தும் தமது இருப்பைத் தக்கவைக்கலாம். அதுவும் ஐ.எஸ். மூலமான அச்சுறுத்தலைப் பயன்படுத்தித்தான் இதனைச் செய்யலாம் என்ற வகையில் அமெரிக்கா சிந்தித்திருப்பதாகத் தெரிகின்றது.

அதன் பிரதிபலிப்புத்தான் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்த வாரம் வாஷிங்டன்  அழைக்கப்பட்டதும், அங்கு செய்யப்பட்ட உடன்படிக்கைகளும். உயர் மட்டக்குழு ஒன்றுடன் அங்கு சென்ற மாரப்பன, முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். அவர் முதலில் நடத்தியது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் போர்மியோவுடன். அது ஒரு வழமையான சந்திப்புத்தான்.  அவர்தான் அமெரிக்காவின் வெளிவிவகாரத்தை கையாள்பவர். அதனால் அந்தச் சந்திப்பில் அதிமுக்கியமாக எதுவும் இருக்கப் போவ தில்லை.

அதன் பின்னர் அவர் நடத்திய சந்திப்புத்தான் முக்கியமானது. அடுத்ததாக திலக் மாரப்பனை சந்தித்த நபர் அமெரிக்க சனாதிபதி டொனால்ட ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன். அவர் இலங்கை போன்ற ஒரு நாட்டுடன் அரசியல் விவகாரம் குறித்துப் பேசும் ஒரு நபரல்ல. இவர் பேசினால், அதன் பின்னணியில் ஏதோ இராணுவ விவகாரம் இருக்க வேண்டும். அதுவும் பெரியளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவின் சர்வதேச வேலைத் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுவிட்டது என்பது இதன் பொருளாக இருக்கலாம். இலங்கை விவகாரத்தில் அமெரிக்க சம்பந்தப்பட்டிருப்பது இப்போது இரகசியமான ஒன்றல்ல. முன்னர் குறிப்பிட்டது போல, எப்.பி.ஐ. இங்கு வந்திருப்பது பகிரங்கமானது. சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுச் சேவையைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்களா என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

100817 F 6824H 007 அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை - பூமிகன்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இப்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் ஆலோசகர்கள் வர இலங்கை வர இடமளிக்கப்பட்டுள்ளது. இராணுவம் வந்தால் நிச்சயமாக சர்ச்சை ஏற்படும். இராணுவ ஆலோசகர்கள் பெருமளவுக்கு வரலாம். அது சர்ச்சையை ஏற்படுத்தாது.

சீனப் புலனாய்வாளர்கள் அதிகளவில் இலங்கையிலிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக் கின்றது. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் இலங்கை அரசுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவர்கள் நுைழந்திருக்கலாம் என்பது அமெரிக்காவின் கணிப்பு. சீனப் புலனாய்வாளர்கள் இங்கிருப்பதற்கான சாத்தியத்தை இலங்கையின் பாதுகாப்புத் துறையினரும்  மறுக்கவில்லை. ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்காத வரையில் பிரச்சினையில்லை என்பதுதான் இலங்கையின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கையிலிருக்கக்கூடிய சீனப் புலனாய்வாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என அமெரிக்கா சிந்தித்தது. அதன் விளைவுதான் வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள military-to-military cooperation தொடர்பான உடன்படிக்கை. இதிலுள்ள மற்றொரு அம்சம் என்னவென்றால், அமெரிக்கக் கப்பல்களும் இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்பதாகும்.

ஐ.எஸ். மீதான சர்வதேசப் போர்ப் பிரகடனம் என்ற பெயரில் ஏதோ ஒருவகையில் இலங்கையைத் தன்னுடைய பாதுகாப்பு வலயத்துக்குள் அமெரிக்கா கொண்டுவந்துவிட்டது. இதனால்தான், எதிர்க்கட்சிகள் இப்போது கிளர்ந்தெழுந்திருக்கின்றன. அமெரிக்க தூதுவர் மகாநாயக்கர்கள் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையில் நிரந்தரமான முகாமை அமைப்பதற்கான உடன்படிக்கை எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கம் அழைத்தால் இலங்கை வரும் அமெரிக்கப் படையினர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமே உடன்படிக்கை இடமளிக்கும்” என விளக்கமளித்து ள்ளார்.

அதாவது, தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இலங்கை வந்து “தற்காலிகமாக” தங்கியிருப்பதற்கும் இந்த உடன்படிக்கை இடமளிக்கின்றது. “தற்காலிகமாக” என்பது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதற்கு இரு தரப்பினரிடமும் விளக்கம் இல்லை. அது வருடக்கணக்கிலும் நீடிக்கலாம்.

சனாதிபதி மைத்திரி சீனா சென்று செய்துகொண்டுவந்துள்ள பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான military-to-military cooperation குறித்த உடன்படிக்கை உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதனுடைய நீண்டகாலக் கவலையாக இருந்தது இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குதான். ஈஸ்ட்டர் குண்டுவெடிப்புக்கள் அதற்கு எதிராக வலுவாக காய்களை நகர்த்துவதற்கு அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருப்பதாகவே கருதப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் இது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு அதிஸ்டம் தான். தாராளமாக உதவிகளை வல்லரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு செய்கின்றன. முஸ்லிம்களை அடக்குவதாகக் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களுடைய சனநாயகப் போராட்டங்களையும் அடக்கமுடியும். அவசரகாலச் சட்டம் இதற்கு உதவும். “பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச யுத்தம்” ஒன்றில் இலங்கையையும் இணைத்துக்கொண்டுள்ள நிலையில், ஜெனீவாவிலோ சர்வதேச அரங்கிலோ இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க அமெரிக்கா முனையுமா என்பதும் முக்கியமான கேள்வி. ஆக, ஈஸ்டர் தாக்குதலால் அதிகளவு பலனடைந்திருப்பது இலங்கைதான்!