அமெரிக்காவின் சதி! ஆபத்தான கட்டத்தில் இலங்கை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் சோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் பயங்கரமான சவாலை எதிர்கொள்கின்றன, இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை ஆகும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சோபா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை ஏற்கனவே அமெரிக்காவுடன் இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கையின் துறைமுகங்கள் விமான நிலையங்கள், எரிபொருள் மற்றும் தகவல்தொடர்பு போன்ற வசதிகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கின்றது.

குறிப்பாக, அமெரிக்க துருப்புக்கள் எந்த அறிவித்தாலும் இன்றி இலங்கைக்கு வருவதற்கும், அவர்களின் போர் விமானங்கள் மற்றும் பிற போர் உபகரணங்கள் மற்றும் இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லாத அவர்களின் சொந்த தகவல் தொடர்பு அமைப்பு போன்ற அனைத்து சக்திகளையும் போரில் ஈடுபடுத்துவதற்கு சோபா ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

இன்று, ஈரானில் ஒரு சிறப்பு இராணுவத் தளபதியை படுகொலை செய்வதன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது. இது ஈராக்கிய அரசாங்கத்துடன் 2014 இல் அமெரிக்க நிதியுதவி அளித்த சோபா ஒப்பந்தத்தில் ஈராக் கையெழுத்திட்ட விடயத்தை அமெரிக்கா சாதகமாக பயன்படுத்தியது.

அதாவது, அமெரிக்கப் படைகள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ளன, ஈராக்கில் உள்ள வளங்கள், அதாவது இராணுவ தளங்கள் மற்றும் தரையில் உள்ள வசதிகள் போன்றவற்றைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் இந்த சவாலை எதிர்கொள்கின்றன, இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை ஆகும். நாடுகளின் இறையாண்மையை இது பாதிக்கின்றது.

மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் யுத்த சூழ்நிலையைப் பார்க்கும்போது, இந்த யுத்தத்தில் அமெரிக்கா இலங்கையை ஒரு பங்காளியாக மாற்றுவதற்கான தெளிவான வாய்ப்பு உள்ளது. அது நிகழும் முன் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உண்மையான அச்சுறுத்தலாக 1995 இல் கையெழுத்திடப்பட்ட சோபா ஒப்பந்தம் 2007 இல் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கையெழுத்திடப்பட்டது, மற்றும் 2017இல் அக்ஸா ஒப்பந்தத்தின் நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்து நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வருமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.