அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலகுகின்றனர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இன்று மாலை முதல் இராஜினாமா செய்வதாக அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கின்றனர்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துவித அமைச்சுக்களிலிருந்தும் இன்றுமுதல் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கடந்த சம்பவங்களுடன் அமைச்சர்கள் எவரும் ஏதாவது முறையில் சம்பந்தப்பட்டிருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசாங்க அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விலகினாலும் நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்களாக அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவினை தொடர்ந்தும் வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சுப் பொறுப்புக்களை இந்த நாட்டில் நிலையான ஐக்கியம், நல்லிணக்கம், சமாதானத்திற்காக அர்ப்பணிப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.