அண்ணன் பிரதமர் தம்பி ஜனாதிபதி ராஜபக்ஸ குடும்பத்தில் இலங்கையின் எதிர்காலம்

இலங்கையின் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஸ குறிவைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, அந்த இடத்திற்கு மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதமர் நியமனம் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தல் தான் ராஜபக்ஸ குடும்பத்தின் தற்போதைய இலக்காக உள்ளது.

கடந்த வருடம் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி திட்டங்கள் காரணமாக மகிந்த ராஜபக்ஸ முறையின்றி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் சட்ட போராட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக மகிந்த ராஜபக்ஸ பதவியிழந்தார்.

தற்போது கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, மகிந்த ராஜபக்ஸ மீண்டும் பிரதமர் பதவியில் குறிவைத்துள்ளார். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை மகிந்த காத்திருக்க மாட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக வைப்பதன் மூலம் பாராளுமன்ற ஆட்சியை கலைக்க முற்பட்டு மீண்டும் குறித்த காலத்திற்கு முன்பதாகவே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி தானே பிரதமராக முற்படுவார் என்று கூறப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இருக்கும் கூட்டணி பாராமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த ராஜபக்ஸ இரகசியமாகப் பேச வாய்ப்புள்ளது. அத்துடன் ராஜபக்ஸ குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியே அங்கு தற்போது ஆளும் கட்சியாக உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மாற்றும் முயற்சியில் ராஜபக்ஸ குடும்பம் முயற்சிக்கும். இதன்மூலம் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸவும், பிரதமராக மகிந்த ராஜபக்ஸவும் விரைவில் பதவியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.