அடுத்த இலக்கு சஜித் பிரேமதாஸ: விசாரணைக்குத் தயாராகும் பொலிஸ்

கடந்த அரசில் கலாசார விவகாரத்துக்கு பொறுப்பாக இருந்த அப்போதைய அமைச்சர் சஜித் பிரேமதாஸ மீது கோட்டா அரசின் அடுத்த குறி விழுந்திருப்பதாக தெரிகிறது. அவர் விரைவில் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என கொழும்புத் தகவல்கள் சொல்கின்றன.

அளவுக்கதிகமாக நிதி வழங்கிய விவகாரத்தில் அவர் மீது குற்றம்சாட்டும் முன்னேற்பாடுகள் நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கலாசார நிதி வழங்கல் பற்றி விவாதிக்கப்பட்ட ஒரு உயர்மட்ட கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, இந்த விவகாரம் குழுவொன்றின் மூலமாக உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது.

கலாசார நிதி வழங்கலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்படுமென அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பெளத்த விகாரைகளுக்கு சஜித் வழங்கிய நிதி தொடர்பாகவே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விகாரைகள் ஒவ்வொன்றுக்கும் 1 கோடி ரூபா தொடக்கம் 8 கோடி ரூபா வரை வழங்கப்பட்டுள்ளது.

சில விகாரைகளுக்கு, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மிகுதிப் பணம் தரப்படுமென்ற கடிதம் வழங்கப்பட்டு ஒரு தொகுதி பணம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதான குறுகிய காலத்தில் விகாரைகளுக்கு வழங்கப்பட்ட பணம், வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட கடிதங்கள் போன்றவை தற்போது தொகுக்கப்பட்டு வருகின்றன.