அடுத்து வரும் வருடங்களில் மூன்று கோணங்களில் எமது செயற்பாடுகள் அமையும்: கஜேந்திரகுமார்

“அடுத்ததாக வரப்போகும் வருடங்களில் எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்த ஐந்து வருடங்களுக்கான தமது செயற்பாடுகள் குறித்து ஊடகம் வழங்கியுள்ள நேர்காணலில் இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“முதலாவதாக கோதபாய ராஜபக்ஷ கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்களை கொண்டு அமைய எதிர்ப்பதற்கு உரிய தெளிவூட்டலை செய்யும். அதே சமயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைஇ நாட்டை பிரிக்காமல் தமிழ் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்புக்கான யோசனைகளை அடைவதற்கான உரிய அழுத்தம் கொடுக்க செயற்படுவோம்.

இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைத்த இன படுகொலைகளுக்கு ஸ்ரீலங்கா அரசை பொறுப்பு கூற வைக்கக்கூடிய ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மிக கடுமையாக உழைப்போம்.

மூன்றாவதாக தமிழ் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதாரத்தின் பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ்மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு நம்பிக்கையுடன் பயணிப்போம்.

அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டு வந்து சிறிய நடுத்தர தொழில்துறையை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம்.

இதன் ஊடாக தாயகத்திலுள்ள வேலை வாய்ப்பை உருவாக்குதல்இ தமிழ் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் வருமானத்தை அதிகரித்து பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் போன்றன ஏற்படும். இதன் பிரகாரம் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு செய்கின்ற தொழில்துறை ஊடாக அவர்களுக்கு லாபமும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையிலும் நாம் திட்டங்களை நாங்கள் வகுத்து கொடுக்கவுள்ளோம்.”