அகதிகளை திருப்பி அனுப்புவதை சிறீலங்கா நிறுத்த வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை பலவந்தமாக அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவதை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என அனைத்துலக மன்னிப்புச் சபை நேற்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மை மதத்தவரான சியா மற்றும் கிறிஸ்த்தவர்கள் சிறீலங்காவில் அகதிகளாக தஞ்சடைந்திருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

அவர்களைத் தடுத்து வைத்துள்ள சிறீலங்கா அரசு தற்போது அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதுகாப்பற்ற நாட்டுக்கு அவர்களை மீண்டும் பலவந்தமாக அனுப்பும் செயல் அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும்.

அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து நேரலாம். இரண்டு தடவைகள் இடம்பெயரும் நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அகதிகள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தடிகள், கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த வன்முறையளர்கள் அகதிகள் தங்கியிருந்த இடத்தின் முன் நின்று அவர்களை பலவந்தமாக வெளியெறுமாறு கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

கையில் கிடைத்த பொருட்களை எடுத்தவாறு அகதிகள் காவல்நிலையங்களிலும், அருகில் உள்ள சமூகநல நிலையங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால் அவர்களை அவர்களின் நாட்டுக்கு பலவந்தமாக அனுப்புவதற்கு சிறீலங்கா அரசு முயன்றுவருவது இது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.