வெள்ளைக் கார் கடத்தல் விவகாரம் – புதிய அரசை ஆட்டம் காணவைத்துள்ளது

சிறீலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து துதரகத்தின் நுளைவு அனுமதிப்பிரிவில் பணியாற்றும் பெண்ணைக் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு வாரமே நிறைவு செய்துள்ள கோத்தபாயா ராஜபக்சா தலைமையிலான அரசை ஆட்டம்காண வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதுவர் கருணாசேனா கெட்டியாராட்சியை அழைத்துள்ள சுவிஸ் வெளிவிவகார அமைச்சு நாளை தனது கடுமையான செய்தி ஒன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் பல ஐரேப்பிய நாடுகளும் சுவிஸ் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. வெளிவிவகார அமைச்சர் குணவர்த்தனாவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உடனடியான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

நவம்பர் 25 ஆம் நாள் மாலை 5 மணியளவில் சேனாநாயக்க மாவத்தை பகுதியில் சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் நடந்து சென்றுகொண்டிருக்கையில் அவரைப் பின்தொடர்ந்த வெள்ளை நிற டொயட்டா காரில் வந்த ஐந்துபேர் கொண்ட குழு பணியாளரை பலவந்தமாக காரில் கடத்திச் சென்றதுடன், கறுப்பு துணியினால் கண்ணையும் கட்டியுள்ளனர்.

பாலியல் ரீதியாகவும் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள பணியாளர் சிறீலங்கா குற்றப்புலனாய்வு அதிகாரி நிசந்தா சில்வா சுவிஸ் தூதரகத்தின் உதவியுடன் சுவிஸ் இற்கு தப்பிச் செல்வதற்கான நுளைவு அனுமதியை பெறுவதற்கு ஏன் உதவிகளை வழங்கினாய் என்ற கேள்வியை கடத்தியவர்கள் தன்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் இடம்பெறுவதற்கு முதல் நாளே சில்வா சிறீலங்காவில் இருந்து வெளியேறியிருந்தார். ஆனால் வெளியேறுவதற்கு இருநாட்களுக்கு முன்னர் சில்வா தனது கைத்துப்பாக்கி மற்றும் உந்துருளியை கையளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் சிறீலங்கா அரசுக்கு அதனை மறைத்துள்ளனர். எனவே இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்ற அதிர்ச்சியில் சிறீலங்கா அரசு உறைந்துள்ளது.

சில்வா பல முக்கியமாக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை தன்னுடன் எடுத்துக் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கா படுகொலை வழக்கு, பிரகித் எக்நலிகொட கடத்தல், கெயித் நொயர் மீதான தாக்குதல் மற்றும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பானவை என தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட பணியாளருக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அவரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்குமாறு சுவிஸ் தூதரகம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கேட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரங்கள் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.