Home உலகச் செய்திகள் விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது.

900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளே விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறனை முன்னர் கொண்டிருந்தன, 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா ஆரம்பித்த இந்தத் தி;ட்டத்தைத் தொடர்ந்து, 1960 களில் ரஸ்யாவும் செயற்கைக்கேளை சுட்டு வீழ்த்தும் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு சீனாவும் அதில் இணைந்து கொண்டது. சீனாவும் ஏவுகணை மூலம் தனது உபயேகமற்ற செய்மதி ஒன்றை பரீட்சார்த்த முயற்சியாக 2007 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியிருந்தது. ஆனால் சீனாவின் ஏவுகணையானது பூமியில் இருந்து 800 கி.மீ தூரத்தில் இருந்த செயற்கைக்கோளைச் சுட்டு வீழத்தியிருந்தது.

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை சுட்டுவீழத்தும் தொழில்நுட்பத்தை தாம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு 24 மாதங்கள் தேவையெனவும் இந்தியா தெரிவித்திருந்தது.

இந்தியாவின் கடந்த வார நடவடிக்கை தொடர்பில் தமக்கு முன்னரே தெரியும் எனவும், விண்வெளியில் ஏற்பட்ட வெடிப்பை கொலொராடாவில் உள்ள தமது வான்படைத் தளத்தில் இருந்து பதிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க வான்படையின் விண்வெளிப் பிரிவுக்கான தளபதி லெப். ஜெனரல் டேவிட் தோம்சன் அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முயற்சியானது சீனாவுக்கு எதிரான போட்டியாகும் என யப்பானின் கொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியர் கசூடோ சுசூக்கி தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனா மேற்கொண்டுவரும் விஸ்த்தரிப்புக்களை முறியடிக்கும் நகர்வுகளை மேற்குலகமும், யப்பானும் மிகத்தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் யப்பான் பேராசிரியரின் கருத்து முக்கியமானது.

1990 களில் சிறீலங்காவுக்கு நிதியை வழங்கும் நாடுகளில் முதன்மையில் இருந்த யப்பானை 2000 ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் சீனா பின்தள்ளியிருந்ததுடன், சிறீலங்காவின் பல பகுதிகளை தனது ஆதிக்கத்திற்குள்ளும் சீனா கொண்டுவந்திருந்து.

இந்த நிலையில் தான் தமிழ் மக்களின் விடுதலைப்போரை தனது பிராந்திய நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மேற்குலகக் கூட்டணி தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக சிறீலங்கா மீது தொடர் அழுத்தங்களை தக்கவைப்பதற்கு முயற்சித்து வருகின்றது. அதாவது சிறீலங்கா மீது நடவடிக்கை அற்ற ஒரு அழுத்தமான சூழ்நிலை.

UNHRC 2019 விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்சிறீலங்கா அரசு கேட்காமலேயே பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமைக்குழு நாடுகளின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியதன் பின்னனியும் இதுவே.

ஆனால் இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அனைத்துலக சமூகத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அது தகர்;த்துள்ளது.

அது மட்டுமல்லாது கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தாம் ஏற்கப்போவதில்லை என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளதும், நாம் கால அவகாசத்தை கோரவில்லை என சிறீலங்கா அரச தரப்பு கூறுவதும், ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் பிழைகளைக் கண்டறிந்து தான் அதில் திருத்தங்களைக் கூறியதாக வடமாகாணத்திற்கான சிங்கள அரசின் ஆளுநர் பொய்யுரைப்பதும் ஐ.நாவின் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

அதாவது சிறீலங்கா அரசு அழுத்தமான கோரிக்கையை முன்வைக்காமலேயே ஐ.நா காலஅவகாசம் வழங்கியது என்பது தமிழ் மக்களுக்கு கடுமையான அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த கால அவகாசத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு சென்று சிறீலங்கா அரசுக்கு பாதிப்புக்கள் வராதவாறு பார்த்துக்கொண்டதும், கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவுகளை வழங்கியதும் தமிழ் இனம் தனது வழ்நாளில் கண்ட துரோகத்திற்கான வரலாறாகும்.

எனினும் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தாம் அனுமதிக்கப்போவதில்லை என தற்போது கூட்டமைப்பு தெரிவித்துவரும் கருத்துக்கள் நகைப்புக்கிடமானது என்பதுடன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் அடுத்த நகர்வுமாகும்.

ஏனெனில் தொடர் காலநீடிப்புக்களுக்கு ஆதரவு வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தும் கூட்டமைப்புத்தான் தற்போது அதில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்போவதிலலை என்று கூறுகின்றது.

ஆனால் தமிழ் மக்களிடம் உள்ள கேள்வி என்ன என்றால் நிறைவேற்றப்படாத தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்தால் என்ன அல்லது கொண்டுவராது விட்டால் தான் என்ன? என்பது தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தனது இன மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வுகாண விரும்பினால் அரசியல் கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை, தமது வாழ்நிலங்களின் விடுதலை, காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்கள் போன்ற கோரிக்கைகள் தொடர்பில் தொடர்போராட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழ் மக்களின் கோரிக்கைளை முன்வைத்து எதிர்வரும் மாதத்தின் முன்பகுதியில் இடம்பெறவுள்ள சிறீலங்கா அரசின் வரவுசெலவுத்திட்டத்தின் மீதூன வாக்கெடுப்பை புறக்கணிக்குமா?

அதாவது பல சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் உள்ளபோதும் அதனை தனது உறுப்பினர்களின் சுய விருப்பு வெறுப்புக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறம்தள்ளிவருவது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

ஆனால் தற்போது உலகின் கவனத்தை பெற்றுள்ள விண்வெளிப்போரின் அடுத்த நகர்வில் உள்ள பூகோள அரசியலை உள்வாங்குவதற்கு தமிழ் இனம் தனக்கான ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏனெனில் 1990 களின் பிற்பகுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொண்ட அணுவெடிப்பு போட்டியை போல எதிர்வரும் காலத்தில் பாகிஸ்தானும் விண்வெளிப்போரில் தனது திறமையை காண்பிக்க முற்படும், அதேசமயம், திருமலைத்துறைமுகத்தை அமெரிக்காவிடம் பறிகொடுத்த சீனா தனது அடுத்த நகர்வை வடக்கை நோக்கி ஆரம்பிக்கும்.

Exit mobile version