விண்வெளிக்கு கண்ணாடிக் கோள் அனுப்பும் ரஷ்யா

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, கனடா உட்பட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி ஆய்வுப் பணியை கவனிக்கின்றனர்.

இந்நிலையில், பூமியைப் பற்றி துல்லியமான புள்ளி விபரங்களை அறியவும், ஈர்ப்பு புலத்தை துல்லியமாக அளவிடவும் கோள வடிவிலான கண்ணாடி செயற்கைக் கோளை அனுப்ப ரஷ்ய விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி, பிலிட்ஸ்-எம் (BLITS-M) எனப்படும் இந்தக் கண்ணாடி செயற்கைக்கோள் ரஷ்யாவின்  BLITS-M (போல் லென்ஸ் இன் த ஸ்பேஸ்) செயற்கைக் கோளிலிருந்து மேம்படுத்தப்பட்டதாகும். எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மூன்று கோனெட்ஸ்-எம் வகை தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படும்.

இது புவி இயற்பியல், புவி இயக்கவியல் மற்றும் சார்பியல் தொடர்பான செயற்கைக் கோள் லேசர் வரம்பின் தரவைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய குளோபல் சற்றலைட் நேவிகேஷன் திட்டம் அமைப்பின் துல்லியத்தை அதிகரிக்கவும், சுற்றுப் பாதையில் பல்வேறு வானொலி அமைப்புகளை அளவீடு செய்யவும், பூமியின் சுழற்சி அளவுருக்கள் மற்றும் ஈர்ப்பு விசையின் துல்லியமான பண்புகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் இது பயன்படுத்தப்படும்.

ரஷ்யா 2009ஆம் ஆண்டில், முதல் BLITS நானோ சற்றலைட்டை ஏவியது. கண்ணாடியால் செய்யப்பட்ட இரண்டு வெளிப்புற அரைக்கோளங்கள் மற்றும் உள்புறம் கண்ணாடி பந்து லென்சைக் கொண்ட இந்த செயற்கைக் கோள், 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் பெங் கியூன் – 1சி செயற்கைக் கோளின் உடைந்த ஒரு துண்டுடன் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.