விடுதலைப் புலிகள் போதைவஸ்து வியாபாரிகள் என்ற சிறிலங்கா ஜனாதிபதியின் கூற்றை கண்டிக்கும் விக்னேஸ்வரன்

196

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களின் தலைமையின் கீழ் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான கூட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்ற போது தான் அதில் பங்கு பற்றியதாகவும், அதில் போதைவஸ்து தடுப்பு தொடர்பான அமைப்பின் பிரதானி பேசும் போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள்  விற்பனை, பாவனை போன்ற எந்தவொரு பதிவுகளும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். வடமாகாணம் மட்டும் போதைப்பொருளில் இருந்து விடுபட்ட மாகாணமாக காணப்பட்டது என்றும் அந்தப் பிரதானி கூறினார்.

அதற்கு தான் பதிலளிக்கும் போது, இப்படியாக இருந்த நிலையில், தற்போது வடமாகாணமும் ஏனைய மாகாணங்களைப் போல் வடமாகாணத்திலும் போதைவஸ்து பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது பாதுகாப்புப் படையினர், போதைவஸ்து தடுப்புப் பிரிவினர் அதிகமாக உள்ள போதும், ஏன் வடமாகாணத்தில் இவ்வளவு போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றது என்று தான் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும், மேலும் தான் பேசும் போது, ஒருவேளை வேலியே பயிரை மேயும் சூழல் தற்போது இருந்து வருகிறதோ தெரியவில்லை என்று தான் பதிலளித்ததாகவும் கூறினார்.

இப்படியாக தங்களின் காலப்பகுதியில் கட்டுப்பாடாக கரிசனையாக இருந்த விடுதலைப் புலிகள், ஜனாதிபதி கூறுவது போல இவ்வாறான ஒரு கேவலமான செயலை செய்து பணத்தை ஈட்டுகின்றார்கள் என்ற ஜனாதிபதியின் கூற்று மனவருத்தத்தை தருவதாக தெரிவித்தார். ஜனாதிபதியின் எண்ணத்தின்படி இப்படியாக இருந்தாலும் அதற்கான காரணங்கள், சான்றுகள் என்னவென்று கூறாமல் ஜனாதிபதி இப்படிக் கூறுவது அவர் தமிழ் மக்கள் மேல், அல்லது சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளைஞர்களுக்கு எதிராக அவர் கொண்டிருக்கும் மனோ இயல்பை அது சுட்டிக்காட்டுகின்றது  என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர்கள் அரசாங்கத்தினரே. அவர்கள் தொடர்ந்து காணிகளை பறித்தார்கள். 1956இல் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். வடகிழக்கு மாகாணங்கள் புத்தருக்கு முந்தய காலத்திலிருந்தே சைவத் தமிழர் நாடாக இருந்து வந்தது.