Tamil News
Home செய்திகள் வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு

வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு

வவுனியா வடக்கு பிரதேசம் என்பது படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுரும் ஒரு பாரம்பரிய தமிழ் பிரதேசம். இந்த பிரசேதசபையிலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை தமிழ் கட்சிகளிடையே முரண்பாடுகள் வலுப்பெற்றுவருகின்றன. இதனொரு வெளிப்பாடாக வவுனியா வடக்கு பிரதேசசபையினால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக தோற்றடிக்கப்பட்டுள்ளது.

இந்த கவலைக்குரிய நிலைமைகள் தொடர்பாக சபையின் தவிசாளர் திரு. சபாரத்தினம் தணிகாசலம் அவர்களை நாம் தொடர்புகொண்டு வினவியபோது
அவர் தெரிவித்த கருத்துகளை இங்கு தருகிறோம்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சபையில் தோல்வியை தழுவியிருக்கின்றது. 26 உறுப்பினர்களைக் கொண்ட இன்றைய அவையில் வரவுசெலவுத் திட்டத்திற்கு சார்பாக 9 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பெற்று, நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது என்ற கசப்பான விடயத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

காரணம் எங்களுடன் இருமொழி  பேசுகின்ற உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த 8 உறுப்பினர்களைவிட ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்த  3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.

இவர்களைவிட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த,  பொதுஜன பெரமுன கட்சியின் 5 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 2உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஜே.வி.பியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஐக்கிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் எங்களுடன் இருக்கின்றார்கள்.

இவர்களில் சுதந்திர முன்னணியைச் சார்ந்தவரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர்களும் கடந்த காலங்களில் எங்களுடன் ஆட்சியமைக்க ஒத்துழைத்தார்கள். இந்த நிலையில்தான் இந்த சபை நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது நாங்கள் சமர்ப்பித்த இரண்டாவது வரவு செலவுத் திட்டம்.

அந்த வகையில் அவர்கள் இதனை மக்களின் நலன் கருதி நமக்குத் தேவையான அல்லது பிரதேச அபிவிருத்திக்குத் தேவையான விடயம் என்ற ஒரு நோக்கில்லாது, வெறுமனே அரசியல் சார்ந்த, ஒரு குரோத மனப்பான்மை கொண்ட  ஒரு எண்ணத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் சேர்ந்து எங்களுடைய இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்ததன் மூலம் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியையும், இந்தப் பிரதேசத்தின் நலன்களையும், மக்களின் தேவைகளையும் ஒரு அலட்சிய மனப்பான்மையுடனும் ஒரு விரோத மனப்பான்மையுடனும், அவர்களுக்கு இதைச் செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடும் இவ்வாறு நடந்து கொண்டதன் மூலம் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக நான் மிகவும் கவலையடைகின்றேன். காரணம் என்னவெனில், இந்தப் பதவிகளில் இருப்பது முக்கியமல்ல. வவுனியா வடக்கு என்பது நூறு வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்டதொரு பிரதேசம்.

இங்கு பலவந்தமாக இணைக்கப்பட்ட 5 வட்டாரங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 5 பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும், அவர்களுக்கு நியமன உறுப்பினர்களாக வந்த ஏனைய கட்சிகள் பலவற்றையும் சேர்ந்த 5 உறுப்பினர்களுமாக சேர்ந்து 10 உறுப்பினர்களும் சேர்ந்து  வாக்களித்ததன் மூலம் பெரும்பான்மை இன உறுப்பினர்களின் எண்ணங்களை இவர்கள் நிறைவேற்றியதைப் போன்ற ஓர் உணர்வை  நான் உணர்கின்றேன்.

இது ஒரு பாரதூரமானதும், மக்கள் விரோத போக்கை உடையதுமான செயலாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். காரணம் என்னவென்றால், எது எப்படியிருப்பினும்  கட்சியைச் சார்ந்த அரசியலுக்கு அப்பால்  வவுனியா வடக்கு தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பூர்வீக பிரதேசம். இங்கே நாங்கள் ஒரு அபிவிருத்தியைச் செய்யும் போது, கட்சிகளின் கொள்கைகளுக்கு அப்பால், பிரதேச மக்களின் நலன்களைச் சார்ந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்திலே அவர்கள் இவ்வாறான செயல்களை செய்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க நினைக்கின்றார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆகவே எதிர்காலத்தில் கட்சித் தலைமைகளும் இவர்களும் உரிய கோணத்தில் இந்தப் பிரச்சினைகளை அணுகி, இந்தப் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய உயரிய சிந்தனைகளை அவர்கள் கொண்டு, எதிர் காலத்தில் செயற்பட முனைய வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்திலே மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறு இல்லாவிடில் இப்பிரதேசத்திலே மாற்றுச்  சக்திகள் உருவாவதற்கும், நிலமைகள் மாறிச் செல்வதற்குமான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனை எமது மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் அல்லது நிராகரிப்பார்கள் என்பதை குறிப்பாக சொல்வதற்கு எனக்குத் தெரியவில்லை.

ஆகவே இந்த இடத்திலே நான் திரும்பவும் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்களுடைய கட்சியைச் சாராத ஈ.பி.ஆர்.எல்.எப் உம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச்  சார்ந்தவர்களும் இனம் சார்ந்தது என்பதை விட, இந்தப் பிரதேசத்தை நாங்கள் தக்க வைத்துக் கொண்டு இந்த மக்களுக்கு நாங்கள் சேவையாற்ற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளை கொண்டு இவர்கள்  மாற வேண்டும் என்ற வேண்டுகோளை நான்  அவர்களுக்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

 

 

Exit mobile version