ராஜீவ் கொலை வழக்கில் 7பேர் விடுதலை முடிவை எடுக்க அரசு கால தாமதம் – அற்புதம்மாள் குற்றச்சாட்டு

ஏழுபேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் கடந்தும், தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் 161இன்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை, அவரது பெயரை பயன்படுத்தி ஆட்சி நடத்தும் அ.தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை எனவும் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.

7பேரும் 28 ஆண்டுகளைக் கடந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். தற்போதைய கொரோனா அச்சுறுத்தலிலும், பேரறிவாளனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் சிறை விடுப்பையாவது அளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

7பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஆளுநர் இந்த விடயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல் உள்ளதால் அற்புதம்மாள் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.