ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதம் குறித்து தமிழக அரசு விளக்கம்

67
11 Views

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தாமதம் தொடர்பாக தமிழக ஆளுநர் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், பேரறிவாளனை 90 நாட்கள் பரோலில் விடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

அப்போது 7பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த பின்னரும் அது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதற்கு 29ஆம் திகதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியிருந்தது.

இதற்கமைவாக நேற்று (29) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறை விடுப்பு குறித்து சிறை நிர்வாகம் ஏன் இன்னும் முடிவு செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தாங்கள் சுட்டிக்காட்டியதையும் நினைவுபடுத்தினர்.

அப்போது முன்னிலையான அரசு தரப்பு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், இது தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலாளரிடமிருந்து தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக ஜெயின் கொமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை பெறுவதற்காக ஆளுநர் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் பேரறிவாளனின் சிறை விடுப்பு குறித்து மூன்றாம் திகதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கை ஓகஸ்ட் 03ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here