யாழ் கொக்குவில் இந்திய இராணுவம் மேற்கொண்ட படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று

113

1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் – தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்திய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு தேடிய மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர்.

1987 ஒக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்களின் மீது பீரங்கித்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.

உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

அன்றைய தினம் இவர்களுடன் படுகொலை செய்யபட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் அதேவேளை இதே நாள் வேறு சம்பவங்களில் படுகொலை செய்யபட்ட அப்பாவி பொதுமக்களையும் நினைவுகூருவோமாக.