Tamil News
Home செய்திகள் மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்’

மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்’

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கமைய வாரத்தின் முதலாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கடற்கரைப்பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்கும் போர்குற்றங்களுக்கும் நீதி வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும், வட கிழக்கு மாகாணங்களில் பொதுஜன வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையுடன் நடத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், தமிழ் மக்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள கையளிக்கபப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.

“ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஆயுத படைகளினால் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நினைவு கூர்ந்து கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் இனவழிப்பு வாரத்தை முன்னெடுக்க வேண்டும்,” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழினப் படுகொலை வாரம் மே 12 ஆம் திகதியிலிருந்து மே 18 ஆம் திகதி வரை 21 இடங்களில் அனுஷ்டிக்க உள்ளோம். இறுதியாக மே 18 முள்ளிவாய்க்காலில் நடத்த அழைப்பு விடுத்தள்ளோம். ஆகவே சகல தமிழ் தேசிய அமைப்புக்களும் பொது மக்களும் உணர்வுபூர்வமாக தன்னெழுச்சியாக அங்கே ஒன்று கூட வேண்டும்.

“சென்னையிலே ஐல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மக்கள் திரண்டது போல முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கும் மக்கள் திரள வேண்டும். அவ்வாறு எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி அணிதிரளுவதனூடாக அரசிற்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் ஒரு தெளிவான செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும்,” என்றார்.

Exit mobile version